ஆசிரியர் நியமன முறைகேட்டில் கைதான சில மணி நேரங்களில் மந்திரிக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69). இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அமலாக்கத்துறையில் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் நேற்று முன்தினம் தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ. 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறையில் நேற்று மாலை கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் மந்திரி பார்த்தா சாட்டர்ஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் மாநில அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.