ஆஷ் துரை அரசியல் முதல் இரண்டு மாங்காய் அடித்த அமைச்சர் வரை! – கழுகார் அப்டேட்ஸ்

தொகுதிப் பக்கம் தலைகாட்ட முடியாத அளவுக்கு எப்போதும் ‘பிஸி’யாகவே இருக்கும் ஆ.ராசா, மழை பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காகக் கடைசி ஆளாக நீலகிரி தொகுதிக்கு வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பார்க்கும் மகிழ்ச்சியில், கட்சி மாநாடு போல தோரணம் கட்டி, பேனர்கள் வைத்து பிரமாண்ட வரவேற்பு கொடுத்தார்கள் உடன்பிறப்புகள்.

ஆ.ராசா பார்வையிடச் செல்லும் இடங்களுக்கு அவருடன் வருமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ‘அரசு விழாதானே…’ என்று நம்பி ஆட்சியரும், மாவட்டக் கண்காணிப்பாளரும், அதிகாரிகளும் சென்றிருக்கிறார்கள். அங்கோ, நிவாரண உதவிகள் வழங்கும் விழா என்ற பெயரில், கரைவேட்டிகளின் கட்சி விழா போலவே நடந்திருக்கிறது. பதறிய கலெக்டர், பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டாராம்!

தூத்துக்குடி மாநகராட்சியில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் 5 பழமையான இடங்களைப் புனரமைப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலேயர் காலக் கட்டடமான ஆஷ் துரையின் நினைவு மண்டபமும் ஒன்று. இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள பா.ஜ.க., “ஆஷ் துரையைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட வாஞ்சிநாதனுக்கு எந்த நினைவுச் சின்னமும் இல்லை.

ஆஷ் நினைவு மண்டபம்

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்த, ஆஷ் துரையின் மண்டபத்தைப் புனரமைப்பதுதான் திராவிட மாடலா?” என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பதிலுக்குச் சிலர், “வாஞ்சிநாதன், ஆஷ் துரையைச் சுட்டது தேசபக்தியிலா, சமூகப் பற்றிலா?” என்று கேள்வி கேட்டு சமூக வலைதளத்திலும் இந்தப் பிரச்னையை பெரிதாக்கிவருகின்றனர்!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பொறுப்பை வழங்கி, ‘ஓ.பி.எஸ் இடத்தில் இனி இவர்தான்’ என்று கைகாட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கொங்கு மண்டலத்தில் சிலர் இந்தப் பதவியைக் கேட்டபோதும், முக்குலத்தோர் சமூக அமைப்புகளைச் சமாதானப்படுத்தவே இப்படியொரு முடிவை எடுத்தாராம் பழனிசாமி. ஆனாலும், சீனியர்களான ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ ஆகியோருக்கு அமைப்புச் செயலாளர் பதவி மட்டும் கொடுத்துவிட்டு, ஏற்கெனவே ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளராக இருக்கும் ஆர்.பி.உதயகுமாருக்கு மட்டும் கூடுதல் பொறுப்பை வழங்கியிருப்பது முக்குலத்தோருக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆர்.பி.உதயகுமார்

இதற்கிடையே தமிழக அரசுக்கு எதிராக 25-ம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் போராட்டத்தில், ஓ.பி.எஸ் மாவட்டமான தேனி மாவட்டப் பொறுப்பாளராக உதயகுமாரை அறிவித்திருக்கிறது தலைமை. இப்படி அவருக்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பது மற்ற நிர்வாகிகளுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்பிரச்னையை எப்படி சமாளிக்கப்போகிறார் எடப்பாடி என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கிறது அமைச்சர் பொன்முடியின் சொந்த ஊர். அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அருண் கொலைசெய்யப்பட்ட வழக்கில், மூன்று சிறார்கள் உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அமைச்சரின் சொந்த கிராமத்திலேயே சம்பவம் நடந்தேறியுள்ளதால், மருத்துவமனைக்குச் சென்று இளைஞரின் உடலைப் பார்த்த அமைச்சர் பொன்முடி, ஆறுதல் கூறுவதற்கு அருண் வீட்டிற்கும் நேரில் சென்றார். அப்போது, அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்த அருணின் உறவினர்கள், வீட்டின் கதவையே மூடிக்கொண்டார்கள்.

அமைச்சர் பொன்முடி

கோபத்தை மறைத்துக்கொண்டு சிறிது நேரம் காத்திருந்த அமைச்சர், போலீஸாரின் உதவியோடு கதவைத் திறந்து பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, உதவித் தொகையையும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். “தேர்தலில் ஜெயித்து அமைச்சரானதிலிருந்து சொந்த ஊரையே மறந்துவிட்டார் அமைச்சர். அதனால்தான், அருணின் உறவினர்கள் அப்படி நடந்துகொண்டார்கள்” என்கிறார்கள். எனினும், “அமைச்சரைக் காக்க வைத்ததற்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை, சிலர் எங்கள் மகனின் மரணத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்கள்” என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் அருணின் பெற்றோர்கள்!

தமிழகத்தில் குரூப்-1 தேர்வு மூலம், புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட 87 டி.எஸ்.பி-க்கள் பயிற்சி 15 நாள்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனாலும், இதுவரை அவர்களுக்குப் பணியிடம் ஒதுக்கப்படவில்லையாம். ஆர்டரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டி.எஸ்.பி-க்களிடம் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தரப்பில் ‘பேச்சுவார்த்தை’ நடத்தப்பட்டுவருகிறதாம். அதிலும் தலைநகர் சென்னையில் பணியிடம் ஒதுக்க, பத்து ‘லட்டு’க்கள் வரை பேசப்படுகிறதாம். தாம்பரம், ஆவடி கமிஷனரகத்தில் பணியிடம் ஒதுக்கவும் கணிசமான இனிப்பு கேட்கிறார்களாம்!

அரசு நிகழ்ச்சிகளில் இந்து மத வழிபாடு கூடாது என்று ஆக்ரோஷமாக அதிகாரிகளிடம் சண்டையிடும் வீடியோவை வெளியிட்டார் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார். அது சமூக வலைதளங்களில் வைரலாகவே, பா.ஜ.க-வினர் அதைக் கையிலெடுத்து எதிர்க்கருத்துக்களைப் பரப்பினர். சும்மாவே இந்து மதத்துக்கு எதிரான கட்சி என்று தி.மு.க-வை பா.ஜ.க விமர்சித்து வருகையில், இந்த வீடியோ அதற்குத் தீனி போடுவதுபோல் அமைந்துவிட்டதைக் கட்சித் தலைமை ரசிக்கவில்லையாம்.

செந்தில்குமார்

ஆனாலும்கூட, அடுத்தடுத்த நாள்களில் அந்த வீடியோ தொடர்பாகப் பல்வேறு தளங்களில் வெளியான செய்திகளைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்துவந்தார் செந்தில்குமார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற தலைமைக் கழக நிர்வாகிகள், ‘இந்து மதத்தை எதிர்க்கிறேன் பேர்வழி எனத் தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்பியதே தப்பு. அது தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து மேலும் சிக்கலை உருவாக்காதீர்கள்…’ என கடுகடுத்திருக்கிறார்கள்!

திருவண்ணாமலை நகரில், சாலையை அகலப்படுத்துவதற்காக என்று சொல்லி சமீபத்தில் சாலையோர விநாயகர் கோயிலையும், அரச மரத்தையும் அகற்றியிருக்கிறார்கள் அதிகாரிகள். சாலை விரிவுபடுத்தப்பட வேண்டியது அவசியம்தான். ஆனால், அந்த மரத்தை வெட்டியதற்குக் காரணமே வேறு என்கிறார்கள் லோக்கல் புள்ளிகள். மூத்த அரசியல் புள்ளி ஒருவர் அந்த நெடுஞ்சாலையில் புதிதாகப் பள்ளி ஒன்றைக் கட்டியிருக்கிறாராம்.

அதன் வழியை விநாயகர் கோயிலும், மரமும் மறைத்ததால், அகற்றுவதற்குக் காரணம் தேடிக்கொண்டிருந்தாராம் அவர். “சரியாக வந்து சிக்கியது சாலை விரிவாகப் பணி. தற்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துவிட்டார் மூத்த அரசியல் புள்ளி” என்கிறார்கள் அவர்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.