பகலில் மட்டுமல்லாது இரவிலும் தேசியக் கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மூவர்ண தேசியக் கொடியை சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறைவதற்கு முன்பாக இறக்கி விட வேண்டும் என்பது சட்ட நடைமுறையாக இருந்தது. தற்போது இந்திய தேசியக் கொடி சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தேசியக் கொடிகள் கைத்தறியால் நெய்யப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதியும் அமலில் இருந்தது. ஆனால் தற்போது அந்த விதியிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கைத்தறி மட்டுமல்லாது தேசியக் கொடியானது இயந்திரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும், பாலிஸ்டரில் செய்யப்பட்டதாகவும் இருக்கலாம் எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தது நினைவுகூறத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM