வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : தனது மகள் ஜோயிஷ் இரானி, கோவாவில் சட்டவிரோதமாக ‘பார்’ நடத்துவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
பத்திரிகைகளில் செய்தி
பா.ஜ., வைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவருடைய மகள் ஜோயிஷ் இரானி, 18, கோவாவில் ஒரு உணவு விடுதி நடத்துவதாகவும், அங்கு சட்டவிரோதமாக பார் நடத்தப்படுவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. காங்கிரஸ் பிரமுகர்களை மேற்கோள் காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மறுப்பு
இது குறித்து ஸ்மிருதி இரானி நேற்று கூறியதாவது:என் மகள், சமையல் கலை தொடர்பாக படித்து வருகிறார். அதற்காக, கோவாவில் உள்ள ஒரு உணவு விடுதியில் பயிற்சி பெற்றார். ஆனால், அந்த உணவு விடுதியை என் மகள் நடத்துவதாகவும், அங்கு, சட்டவிரோதமாக பார் இயங்கி வருவதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டி உள்ளது. இது, அடிப்படை ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு. என்னுடைய மற்றும் என் மகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி. காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவருடைய மகன் ராகுல், 5,000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளேன். அதற்காகவே இந்த பொய் புகாரை தேடிப் பிடித்துள்ளனர். இந்தப் பிரச்னையை நாங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், 2024 லோக்சபா தேர்தலில் ராகுல் என்னை எதிர்த்து போட்டியிடத் தயாரா? அவரை அங்கு மீண்டும் தோல்வியடைய வைக்க சபதம் ஏற்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, ஜோயிஷ் இரானி சார்பில் அவருடைய வழக்கறிஞர் கீரத் நாக்ராவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுஉள்ளார்.
நோட்டீஸ்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பவன் கெரா, ஜெய்ராம் ரமேஷ், நீடா டீ சூசா ஆகியோருக்கு ஸ்மிருதி இரானி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், தனது மகளுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை உடனடியாக திரும்ப பெற்று கொள்வதுடன், எழுத்துப்பூர்வமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement