சென்னை: தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவை பொறுத்தவரை கேரளா, டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையில் இறங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) தலைவர் டெட்ராஸ் அதானன் கேப்ரியாசஸ் தலைமையில் ஜெனீவாவில் நேற்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு நிருபர்களுக்கு காணொலி வாயிலாக பேட்டி அளித்த கேப்ரியாசஸ், ‘‘குரங்கு அம்மை உலக அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது’’ என்று அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் குரங்கம்மை தொற்று இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, “ பன்னாட்டு விமான நிலையங்களில் அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறோம். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு முகத்திலோ , முழங்கை கீழ் கொப்பளங்கள் உள்ளதா என ஒவ்வொருவரையும் விமான நிலையங்களில் கண்காணிக்க அறிவுறுத்தி வருகிறோம். தற்போது குரங்கம்மையின் பாதிப்பு 63 நாடுகளில் கடந்திருக்கிறது.தமிழகத்துக்கும், கேரளாவுக்கு இடையே உள்ள 13 எல்லைப் புறங்களிலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இன்றுவரை தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பில்லை. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.