அந்தரங்க உறுப்பை நறுமண திரவங்களால் சுத்தம் செய்யலாமா? | காமத்துக்கு மரியாதை S 2 E 30

அன்பாக ஆரம்பிக்கப்படும் தாம்பத்திய உறவுக்கு, வாய் துர்நாற்றம், வியர்வை வாடையைப் போலவே சங்கடம் தருகிற இன்னொரு விஷயம் அந்தரங்க உறுப்பில் வருகிற கெட்ட வாடை. இது எதனால் ஏற்படுகிறது; தீர்வுகள் என்னென்ன என்பன குறித்துப் பேசுகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

காமத்துக்கு மரியாதை

”ஆணுறுப்புக்கும் அதன் மேலுள்ள தோலுக்கும் இடையில் ஸ்மெக்மா என்றொரு திரவம் சுரக்கும். இதனுடன் அந்தப் பகுதியில் இருக்கிற பாக்டீரியா, ஈரப்பசை, இறந்த செல்கள் ஆகியவை சேரும்போது, ஆணுறுப்பில் வாடை வரும்.

ஆணுறுப்பைவிடப் பெண்ணுறுப்பில் திரவ சுரப்பு அதிகமென்பதால், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களுடன் சேர்ந்து வாடை இன்னமும் அதிகமாக இருக்கும். ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அந்தரங்க உறுப்பில் கெட்ட வாடை வருவது இயல்பான ஒன்றுதான். என்றாலும், உறவில் ஈடுபடும்போது பலருக்கும் அது அசெளகர்யத்தை ஏற்படுத்தலாம்.

அதனால்தான், தாம்பத்திய உறவுக்கு முன்னால் குளிக்க வேண்டுமென்று சொல்கிறோம். இரவில் குளிக்க நேரமில்லை என்பவர்கள், உறவுக்கு முன்னால் அந்தரங்க உறுப்புகளை தண்ணீரும் சோப்பும் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். திட்டமிடாமல் திடீரென உறவு கொள்பவர்களுக்கும், ஓரல் செக்ஸ் செய்பவர்களுக்கும் இந்த வழிமுறையே உதவும்.

டாக்டர் காமராஜ்

குளித்தாலும், சுத்தம் செய்தாலும், லேசாக கெட்ட வாடை வருகிறது என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறேன். ஃபெடரல் ஃபேனை தலைப்பக்கமிருந்து கால் பக்கமாக காற்று வீசுவதுபோல வைத்துவிட்டு உறவுகொண்டால், கெட்ட வாடை அவ்வளவாகத் தெரியாது. இதுவே, கால் பக்கமிருந்து தலைப்பக்கமாக காற்று வருவதுபோல ஃபேனை வைத்துக் கொண்டால் வாடை அதிகமாகத் தெரியும். இந்தப் பிரச்னை அதிகமிருப்பவர்கள் இதை ஃபாலோ செய்யுங்கள்” என்றவர், அந்தரங்க உறுப்பின் கெட்ட வாடைக்கும் ஹைஜீனுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது பற்றியும் விளக்கினார்.

”அந்தப் பகுதியில் கெட்ட வாடை இருப்பதாலேயே நீங்கள் சுத்தமாக இல்லை; அந்தப்பகுதி அழுக்காக இருக்கிறது என்று அர்த்தமில்லை. அப்படியே அழுக்கு இருந்தாலும், அது இறந்த செல்களாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான இறந்த செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகி, நாமெல்லாம் 17 நாள்களுக்கு ஒருமுறை புது மனிதர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தோல் 7 அடுக்குகளைக் கொண்டது. மேலே இருக்கிற 2 அடுக்குகளும் இறந்த செல்கள்தான். அதனால்தான், உடம்பைத் தேய்க்கும்போதெல்லாம் அழுக்குபோல திரண்டு வருகிறது.

காமத்துக்கு மரியாதை

ஆணோ, பெண்ணோ… ‘ஹைஜீனிக்கா இருக்கணும்’ என்று நினைத்துக் கொண்டு, ஸ்ட்ராங்கான கெமிக்கல்ஸ் கொண்ட திரவங்களைப் பயன்படுத்தி அந்தரங்க உறுப்பைச் சுத்தம் செய்வதும், அங்கு கெமிக்கல்ஸ் கலந்த வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதும் பாதுகாப்பல்ல. இதைக் குறிப்பாகப் பெண்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் பெண்ணுறுப்பில் நல்ல பாக்டீரியாக்களும் இருக்கும். அதுதான் கெட்ட பாக்டீரியாக்களிடமிருந்தும் வைரஸிடமிருந்தும் பெண்ணுறுப்பைப் பாதுகாக்கும். அதை கெமிக்கல்ஸ் கலந்த திரவங்களைப் பயன்படுத்தி நீக்கிவிட்டால், புதிதாக ஏதோவொரு வைரஸ் தொற்று பெண்ணுறுப்பில் ஏற்படலாம்” என்கிறார் டாக்டர் காமராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.