உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., ஏன்? விளக்கம் அளித்தது மத்திய அரசு!| Dinamalar

புதுடில்லி:’மாநில அரசுகளின் கோரிக்கை மற்றும் பரிந்துரைகளின்படியே, ‘பாக்கெட்’ செய்யப்பட்ட உணவு பொருட்கள் மீது ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது’ என, மத்திய அரசு விளக்கம் அளித்துஉள்ளது.

அரிசி, பருப்பு உட்பட பல பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.கடந்த, 18ம் தேதி முதல் இதுஅமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்உள்ளிட்ட கட்சிகள், பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டு முடக்கி வருகின்றன.

மாநில அரசுகளின் ஒப்புதலுடனேயே இந்த வரி விதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக,
பார்லிமென்டில் அளித்துள்ள பதிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
குறிப்பிட்டிருந்தார். ஆனால், சில மாநிலங்கள் இதை மறுத்துள்ளன.

சில முடிவுகள்

இது குறித்து, மத்திய அரசின் வருவாய் துறைச் செயலர் தருண் பஜாஜ் கூறியுள்ளதாவது: ஜி.எஸ்.டி., முறை, 2017ல் அறிமுகம் செய்யப் பட்டது. நாடு முழுதும் ஒரே சீரான வரி முறையை அமல்படுத்தும் வகையில் இது அறிமுகமானது. இந்த வரி முறை அறிமுகமானபோது, உணவுப் பொருட்கள் மீதான வரி குறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, பிரபல
நிறுவனங்களின், ‘பிராண்ட்’ எனப்படும் குறியீட்டுடன் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு
மட்டும் வரி விதிக்கப்பட்டது.

அதுபோல, பிராண்டட் பொருட்கள் மீது எவ்வித உரிமையும் கோராமல் இருந்தால், பாக்கெட் செய்திருந்தாலும் வரி விதிக்கப்படாது என்ற வாய்ப்பும் நிறுவனங்களுக்கு தரப்பட்டது.ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இதில் மோசடியில் ஈடுபட்டன. இதனால், அரசுக்கு வர வேண்டிய வரி குறைந்தது.

ஜி.எஸ்.டி., முறைக்கு முன், சில மாநிலங்களில் இந்த உணவுப் பொருட்களுக்கு, வாட் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலிக்கப்பட்டது. தற்போது அந்த வரி வருவாய் குறைந்துள்ளதாக அந்த மாநிலங்கள் தெரிவித்தன.

latest tamil news

முடிவு

இதையடுத்து மோசடியை, இழப்பை தவிர்க்கவும், மாநிலங்களுக்கு வரி வருவாய் கிடைப்பதை உறுதி செய்யவும், ஒரே சீரான முறை இருக்கும் வகையிலும், பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கும், 5 சதவீத வரி விதிப்பது குறித்து ஆராயப்பட்டது.இது பல கட்டங்களாக
நடந்தது. முதலில் பல மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ள, வரி நிர்ணயக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பின், மாநில நிதியமைச்சர்கள் அடங்கியஅமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்தே, ஜி.எஸ்.டி., கவுன்சில்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர் மற்றும் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இந்தக் கவுன்சிலில் உள்ளனர்.அவர்கள் விவாதித்து, பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு வரி விதிக்கும் முடிவை ஒரு மனதாக எடுத்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சக உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:வரி நிர்ணயக்
குழுவில், ராஜஸ்தான், மேற்கு வங்கம், தமிழகம், பீஹார், உத்தர பிரதேசம், கர்நாடகா,
மஹாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். ஜி.எஸ்.டி., கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் கூட்டங்களில் மாநில அரசுகளின் கோரிக்கை ஏற்று, அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களுடன் விவாதித்தப் பிறகே, வரி விதிக்கும் முடிவு
எடுக்கப்பட்டது. இது மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.