விடுமுறை தினத்தில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாபயணிகள்

கொடைக்கானல்: விடுமுறை தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சாரல் மழையுடன் மேகக்கூட்டங்கள் தவழ இயற்கை எழிலை கண்டுரசித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாபயணிகள் வருகை உள்ளது. விடுமுறை தினங்களில் கொடைக்கானல் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நேற்று, இன்று வாரவிடுமுறை என்பதால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளும் அதிகம் காணப்பட்டனர். சுற்றுலாத்தலம் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் இருந்தது. தூண்பாறை, மோயர்பாய்ண்ட், கோக்கர்ஸ்வாக் பகுதியில் மேகக்கூட்டங்கள் இறங்கிவந்து சுற்றுலா பயணிகளை தழுவிச்சென்றது.

அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும், அதை இடையூறாக கருதாமல் மழையில் நனைந்தபடி இயற்கை எழிலை ரசித்தனர்.

ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

சனிக்கிழமை கொடைக்கானலில் 7 மி.மீ., மழை பதிவாகியது. கரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் நடத்திவந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டநிலையில் கடந்த ஓராண்டாக எந்தவித இடையறுமின்றி சுற்றுலாபயணிகள் வந்து செல்வதால் கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள சாலையோர கடைக்காரர்கள், குதிரை சவாரி, சைக்கிள் சவாரியை நம்பி வருவாய் பார்ப்பவர்கள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிய நிலையில் உள்ளனர்.

இன்று கொடைக்கானலில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியாக நிலவி இதமான தட்பவெப்பநிலை காணப்பட்டது. இரவில் குறைந்தபட்சமாக 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காற்றில் ஈரப்பதம் 68 சதவீதம் இருந்ததால் மிதமான குளிர் உணரப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.