டெல்லி : டெல்லியில் இன்று நடைபெற உள்ள புதிய குடியரசு தலைவர் பதவி ஏற்பு விழாவை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்துள்ளார். நேற்று குடியரசு தலைவர் பதவியில் இருந்து விடைபெற்ற ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி அளித்த விருந்து நிகழ்ச்சியையும் நிதிஷ் குமார் புறக்கணித்து இருந்தார். பாஜகவின் தயவில் ஆட்சி நடத்தி வரும் நிதிஷ் குமார், தனது எதிர்ப்பை காட்டி வருவது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒன்றிய பாஜக அரசு அழைப்பு விடுத்த 3 முக்கிய நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்துள்ளார். தனது அரசை பாஜக தலைவர்கள் பகீரங்கமாக விமர்சித்து வருவதால் நிதிஷ் கோபம் அடைந்துள்ளதாகவ கூறப்படுகிறது. மேலும் பாஜகவின் தயவில் ஆட்சி நடத்தினாலும் தனக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை காட்டுவதற்கான வழியாக அவர் இவ்வாறு முரண்டு பிடிக்கிறார் என பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.