நன்றி சொல்ல வந்த ராம்நாத் கோவிந்த்; கேமராவையே பார்த்துக் கொண்டிருந்தாரா மோடி?! – உண்மை என்ன?

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவருக்கு பிரிவு உபசார விழா சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த பிரிவு உபசார விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகைக்காக பிரதமர் மோடி, எம்.பி-க்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் எழுந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது, ராம்நாத் கோவிந்த் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, கை எடுத்து கும்பிட்ட படி நடந்து வந்தார். அப்போது முன்பு நின்று கொண்டிருந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது மோடி, ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்ததை கவனிக்காமல் கேமராவையே உற்று பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சில வினாடிகள் அவர் அருகே நின்ற ராம்நாத் கோவிந்த், பிரதமர் தன்னை பார்க்காததை கண்டு அடுத்த நபரிடம் நகர்ந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் அந்த வீடியோ பதிவை ட்விட்டரில் ஷேர் செய்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், “முழுமையான வீடியோ காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ராம்நாத் கோவிந்த்துக்கு வணக்கம் செலுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதாவது முதலிலே, மோடி ராம்நாத் கோவிந்த்துக்கு வணக்கம் சொல்கிறார். பின்னர் தான் அவரை கடந்து செல்கிறார். ட்ரிம் செய்யபட்ட வீடியோவை தான் பிரிவு உபசார விழாவில் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி புறக்கணித்ததாக பதிவிட்டுள்ளனர்” என பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்தை வாழ்த்திய புகைப்படம் ராம்நாத் கோவிந்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.