இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் தலைநகர் தில்லியிலும் ஒருவருக்கு முதல் முறையாக குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரையில் 75 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்நோயால் பாதித்துள்ளனர். 6 பேர் பலியாகி உள்ளனர். இதனால், இந்த நோயை மருத்துவ அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்தியாவில் இந்நோய் பாதித்த முதல் நபர், கடந்த 14ம் திகதி கேரளாவில் உள்ள கொல்லத்தில் கண்டறியப்பட்டார். இவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து வந்தவர். இதேபோல், வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 2 பேருக்கு இந்த நோய் தொற்றால் பாதித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், தலைநகர் தில்லியிலும் 31 வயதான மவுலானா ஆசாத் என்பவருக்கு நேற்று குரங்கம்மை பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அவருக்கு காய்ச்சல், தோலில் கொப்பளங்களும் ஏற்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு மட்டுமே குரங்கம்மை பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஆசாத் சமீப காலமாக எந்த நாட்டுக்கும் செல்லவில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு உள்ளூரில் இந்த தொற்று ஏற்பட்டு இருப்பது, அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.இந்நிலையில் தெலுங்கானாவில் முதல் முறையாக குரங்கு அம்மை பாதிப்பு தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 40 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். காய்ச்சல் மற்றும் உடலில் தடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையை நாடியுள்ளார். அங்கு அவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.
இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.