நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் முட்டை விலை சரிந்தது. ஒரே நாளில் 25 காசுகள் சரிந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளில் இருந்து 25 காசுகள் குறைத்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், முட்டை விலை 9, 11 மற்றும் 14ஆம் தேதிகளில் தலா 30 காசுகளும், 16-ஆம் தேதி 40 காசுகளும் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 40 காசுகளுக்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி 5 காசுகள் உயர்த்து 4 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆடி பண்டிகையை முன்னிட்டு முட்டை நுகர்வு குறைந்து போனது. அதேபோல் கேரளா மற்றும் வட மாநிலங்களில் முட்டை விற்பனை மந்தமடைந்து அதிகளவு தேக்கம் ஏற்பட்டது.
இதனால், முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் பண்ணை கொள்முதல் விலையை இன்று மீண்டும் 25 காசுகள் குறைத்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். ஆடி மாதம் முடியும் வரை முட்டை விலை நிலையற்றே காணப்படும் எனவும் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM