சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அதன்படி காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நேற்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை எழுத மொத்தம் 22 லட்சத்து 2,942 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 18 லட்சத்து 50,471(84%) பேர் மட்டுமே தேர்வில்கலந்துகொண்டனர். விண்ணப்பித்தவர்களில் 3 லட்சத்து 52,471 பேர்தேர்வெழுத வரவில்லை.
சென்னையில் 457 தேர்வு மையங்களில் நடைபெற்ற குருப்-4 தேர்வை1.56 லட்சம் பேர் எழுதினர். சோழிங்கநல்லூர் ரமண வித்யாலயா பள்ளி தேர்வு மையத்தில் சென்னை ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி ஆய்வு செய்தார்.
தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கினாலும், தேர்வர்கள் சரியாக 9 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டுமெனடிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியிருந்தது. இந்த விதிமுறையால் தமிழகம் முழுவதும் பல்வேறுமையங்களில் சில நிமிடங்கள் தாமதமாக வந்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தாமதத்துக்கு கனமழை உட்பட உரிய காரணங்கள் இருந்தும் அனுமதி வழங்கப்படாதது தேர்வர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் சில மாவட்டங்களில் தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், தங்களின் பலமாத உழைப்பு வீணாகிவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர். மேலும் குரூப்-4 தேர்வு கடினமாக இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக தேர்வர்கள் சிலர் கூறும்போது, “கட்டாயத் தமிழ் மொழி பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்தன. அதேநேரம் பொது அறிவு கேள்விகள் எதிர்பாராத பகுதிகளில் இருந்து கடினமாக கேட்கப்பட்டதால் பதிலளிக்க சிரமமாக இருந்தது” என்று கூறினர்.
இதேபோல், வினா எண் 34-ல் கேட்கப்பட்ட 8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யார் பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என்ற கேள்வியால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
ஏனெனில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்தொகை, உயர்கல்வி உறுதித்திட்டமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. அரசால் கைவிடப்பட்ட திட்டம், செயல்பாட்டில் உள்ளதுபோல் கேட்கப்பட்ட கேள்வியால் தேர்வர்கள் திணறினர்.
மேலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட வினாக்களிலும் வழக்கம்போல் பிழைகள் காணப்பட்டன. குருப்-4 தேர்வைபொறுத்தவரை, நேர்முகத் தேர்வுகிடையாது. எனவே, எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுபணி வாய்ப்பு உறுதி. இதன் முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் குரூப்-4 தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முகவரியை ஹால்டிக்கெட்டில் மாற்றி கொடுத்ததால் 40-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.