“ஆளுநர்களுக்கு இருக்கும் அதிகாரமே போதுமானது; கூடுதல் அதிகாரம் தேவையில்லை” – ஆளுநர் தமிழிசை

புதுக்கோட்டையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவரின் ஆயுர்வேத மருத்துவமனையினை, தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாம் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை தாண்டியுள்ளோம். இதன் மூலம் உலக அளவில் இந்தியாவின் புகழ் ஓங்கியுள்ளது.

ஜூலை 15-ம் தேதி முதல் அடுத்த 75 நாள்களுக்கு அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் கொரோனாவே காணாமல் போனது.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவி ஏற்றுக்கொள்கிறார். அந்த பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன். ஏனெனில் உண்மையான சமூக நீதி, அவரை குடியரசுத் தலைவர் ஆக்கியதால் நிலைநாட்டப்பட்டுள்ளது,

தமிழிசை செளந்தரராஜன்

ஆனால், சமூக நீதி பேசிக் கொண்டிருக்கும் சிலர், அவருக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தது, சமூக நீதியை பெயரளவில் மட்டுமே கொண்டு உள்ளார்கள் என்பதற்கு தற்போதைய குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்கள் வாக்களிக்காமல் இருந்தது ஒரு உதாரணம்.

ஒரு இடத்தில் பேசும் போது, தேசிய கல்விக் கொள்கை தேவை என்று பேசினேன். தாய்மொழியுடன், இன்னொரு மொழியையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை எனக் கூறியிருந்தேன். அதைத்தான் தேசிய கல்விக் கொள்கையும் சொல்கிறது.

இதில் முதல் மொழி நமது தமிழ் மொழி. நமது ஆரம்ப கால பாடத்தை நமது தாய்மொழியான தமிழில் கற்றுக் கொள்ளலாம். தாய்மொழி, தாய்மொழி என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களின் குழந்தைகள் கூட தாய் மொழியில் கல்வி கற்பது இல்லை. இன்னொரு மொழியை கற்பது வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றுதான் நான் சொன்னேன். உடனே இணையதளத்தில் இந்தியை திணிக்கிறார்கள் என்பது போல விமர்சனப் பதிவுகளைப் பதிவிடுகின்றனர்.

`தமிழ்நாட்டில் ஏன் வாலை நீட்டுகிறார்கள்?’ என கேட்கிறார்கள். வாலை மட்டுமல்ல என் உயிர் போனாலும் தமிழகத்தில் தான் போகும். நான் ஒரு தமிழச்சி, வேறு மாநிலத்திற்கு பணி நிமித்தமாக சென்றுள்ளேன். ஆனால், நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவள். இதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் ஒரு பிரச்னை என்றால் அதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு முழு உரிமை உள்ளது. எனது பெயரில் மட்டுமல்ல எனது உயிரிலும் தமிழ் இருக்கிறது. என்னை எதிர்த்து பேசுபவர்கள் முதலில் முழுமையாக தமிழை பிழை இல்லாம் பேச தெரியாதவர்கள். எல்லோரும் அரசியல்வாதிகளாக கவர்னர்களை பார்க்கின்றனர் கவர்னர்கள் அரசியல் செய்வதில்லை. கவர்னர்கள் ஆட்சி அதிகாரத்தை சரியாகத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், அதனை மற்றவர்கள் அரசியல் ஆக்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல.

`புதுச்சேரியில் எங்கள் ஆட்சி தான் நடக்கிறது. துணைநிலை ஆளுநர் ஆட்சி தான் நடக்கிறது’ எனமு ன்னாள் முதல்வர் குற்றம் சொல்கிறார்.

அவருக்கு என்ன இப்ப கஷ்டம் என்றால், துணைநிலை ஆளுநரும் முதல்வரும் இணைந்து செயலாற்றுவது போல் இல்லாமல், நாம் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். இவர்கள் இணைந்து பணியாற்றுகிறார்களே என்ற எரிச்சலில் முன்னாள் புதுச்சேரி முதல்வர் குற்றம் சுமத்துகிறார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறார். நான் அவருக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறேன். இதில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு பிரச்னைகள் இல்லை. புதுச்சேரி மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் இணைந்து தான் செயல்பட வேண்டும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிகழ்வை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள் என்று தான் நினைக்கிறேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர் முருகனைக் கூப்பிட்டது தான், சிலருக்கு பிரச்னை. அடித்தட்டில் இருந்து உழைத்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர் முருகன். அவர் மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வார் என அவரை அழைத்ததில் ஒன்றும் தவறில்லை. இந்திய அரசாட்சியில் உள்ள ஒரு அமைச்சரை பட்டமளிப்பு விழாவுக்கு கூப்பிட்டு உள்ளனர்.

தமிழக உயர்க்கல்வி அமைச்சரின் பெயர் அழைப்பிதழ் இருந்ததா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. அழைப்பிதழ் பேர் இருந்தால் கூட சில நேரங்களில் அவர்கள் வருவது இல்லையே. கவர்னர்களுக்கு வேந்தர் என்ற ஒரு பொறுப்பு கொடுத்திருப்பதை அரசியல் ஆக்கி விடக்கூடாது. எல்லாத்தையும் அரசியலாக பார்த்தால் மாணவர்களுக்கு என்ன தோன்றும். பட்டமளிப்பு விழாக்களையே அரசியல் ஆக்கினால் மாணவர்களுக்கு என்ன தோன்றும்? அவர்களுக்கு நல்லதை விதையுங்கள் என்பதை எனது கருத்து. ஆளுநர்களுக்கு எப்போதும் உள்ள அதிகாரமே போதுமானது. கூடுதல் அதிகாரம் எல்லாம் தேவையில்லை. அதை மதியுங்கள் என்று தான் நான் சொல்கிறேன்” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.