மின் இணைப்பு துண்டிப்பதாக மிரட்டி மோசடி; இன்றைய கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

மின் இணைப்பு துண்டிப்பதாக மிரட்டி மோசடி; ரூ. 4.24 லட்சம் பறித்தவருக்கு போலீஸ் வலை

கோவை : ‘உடனடியாக மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பை துண்டிப்போம்’ என்று மிரட்டி மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்த, 4.24 லட்சம் ரூபாய் திருடிய மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.கோவை, சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் வசிப்பவர் கிருஷ்ணவேணி, 52. இவரது வயது முதிர்ந்த மாமியார் மொபைல் போனில் ஒரு மெசேஜ் வந்தது.

அதில், ‘உங்கள் மின் இணைப்புக்கான கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை. உடனடியாக செலுத்தாவிட்டால் இணைப்பை துண்டித்து விடுவோம்’ என்று இருந்தது. பதட்டம் அடைந்த கிருஷ்ணவேணி, உடனடியாக அதில் குறிப்பிடப்பட்டிருந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.அதில் பேசிய நபர், ‘நீங்கள் ஏற்கனவே மின் கட்டணம் செலுத்திவிட்டீர்கள் என்றால், நாங்கள் அனுப்பிய லிங்க்கை ‘கிளிக்’ செய்து, ‘டெபிட் கார்டு’ மூலம், 10 ரூபாய் மட்டும் செலுத்துங்கள். நீங்கள் கட்டணம் செலுத்தினீர்களா, பாக்கி இருக்கிறதா என்று தெரிந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.

அதை நம்பிய கிருஷ்ணவேணியும், ’10 ரூபாய் தானே’ என்ற எண்ணத்தில், குறிப்பிட்ட அந்த லிங்க்கை கிளிக் செய்து, டெபிட் கார்டு விவரங்களை பதிவு செய்தார். அவ்வாறு பதிவு செய்ததும், அவரது வங்கி கணக்கில் இருந்து, 4 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது. அதிர்ச்சியடைந்த அவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். எஸ்.ஐ., முத்து வழக்கு பதிய, இன்ஸ்பெக்டர் தண்டபாணி நுாதனமாக பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

நகை பறிப்பு வழக்கில் சிக்கிய 12 வயது சிறுவன்

கோவை : கோவை காந்திபுரம் முதல் வீதி எக்ஸ்டென்சன் குடியிருப்பில் வசிக்கும் கனகராஜ் மனைவி கலைச்செல்வி, 61. இவர் கடந்த 19ம் தேதி, கணேசன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், கலைச்செல்வி அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பினர்.கலைச்செல்வி புகாரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி காட்சிப்பதிவுகள் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.இதில், செட்டிபாளையம் பாரதி நகரை சேர்ந்த சபீர் அலி மகன் இசாத் அலி, 19, என்பவரும், 12 வயது சிறுவனும் சேர்ந்து நகை பறித்தது தெரியவந்தது. சிறுவனை கூர் நோக்கு இல்லத்தில் ஒப்படைத்த போலீசார், இசாத் அலியை கைது செய்தனர்.

கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி : கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.புதுச்சேரி, கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி மகேஸ்வரி,25; இவர்களுக்கு திருமணமாகி, நான்கு ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 22ம் தேதி, இரவு 7.45 மணிக்கு, மகேஸ்வரிக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கர்ப்பிணி என்றும் பாராமல் மகேஸ்வரியை, நாகராஜ் பெல்ட்டால் தாக்கியுள்ளார். அப்போது தட்டிக்கேட்ட, மகேஸ்வரியின் தந்தை சுப்ரமணியை, நாகராஜ் அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். சுப்ரமணி காயமடைந்த தனது மகளை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கு, அவருக்கு வயிற்றுவலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுப்ரமணி அளித்த புகாரின் பேரில், நாகராஜ்,28; மீது ஒதியஞ்சாலை போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

பஸ் பயணியிடம் மொபைல் திருடும் காட்சி வைரல்

பாகூர் : புதுச்சேரியில் பஸ் பயணியிடம் மொபைல் போன் திருடும் சி.சி.டி.வி., காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.சில நாட்களுக்கு முன்பு பாகூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் பயணம் செய்த கடலுாரை சேர்ந்த வங்கி நகை மதிப்பீட்டாளர் வேலுசாமி, 60; என்பவரிடம், மொபைல் போனை மர்ம நபர் திருடிச் சென்றார். இந்த காட்சி, பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

அதில், பஸ்சின் முன்பக்க படிக்கட்டு அருகே நின்றிருக்கும் மூன்று பேரில், கட்டை பையுடன் நிற்கும் ஒருவர், அதனை மற்றொருவரிடம் கொடுக்கிறார்.பையை வாங்கிய நபர், கையில் வைத்து மறைத்துக் கொண்டபடி, ஜன்னல் வழியாக பார்ப்பது போல, பயணியின் கவனத்தை திசை திருப்பி, அவரது மேல்சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை திருடிக் கொண்டு இறங்கி விடுகிறார்.இந்த காட்சி தற்போது, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.இதேபோல, அன்றைய தினம் மற்றொரு தனியார் பஸ்சில் சென்ற பாகூரை சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம், மொபைல் போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இச்சம்பவம் குறித்து முதலியார்பேட்டை மற்றும் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை எருமாடு இளைஞர் கைது

பந்தலுார் : பந்தலுார் அருகே, எருமாடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.பந்தலுார் அருகே, எருமாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக, தேவாலா டி.எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையிலான போலீசார், பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

அதில், எருமாடு ஓனிமூலா பகுதியை சேர்ந்த அஜித்,25. என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், கீழ்நாடுகாணி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவரிடம், கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, அம்மன்காவு பகுதியில் மறைத்து வைத்து, அங்கிருந்து, பல்வேறு பகுதிக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அஜித்தை கைது செய்தனர்.

மனைவிக்கு பாலியல் சித்ரவதை சென்னை தொழிலதிபர் கைது

திருவனந்தபுரம் : கேரளாவில், நண்பருடன் சேர்ந்து இரண்டு ஆண்டு களாக மனைவியை பாலியல் கொடுமை செய்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.சென்னையில் தொழில் செய்யும் ஒருவர், மனைவியுடன் கேரள மாநிலம் திருச்சூரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சென்று பார்த்த போது, தொழிலதிபரின் மனைவி ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். அந்தப் பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், உடல் முழுதும் காயங்கள் மற்றும் பாலியல் ரீதியாக கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலையடுத்து, போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: அந்த பெண்ணின் கணவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். கேரளாவின் திருச்சூரில் மனைவியுடன் வசித்தார். கடந்த இரண்டு ஆண்டு களாக தன் நண்பருடன் சேர்ந்து, மனைவியை பாலியல் சித்ரவதை செய்துள்ளார்.

பல நாட்களாக இருவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இரும்புச் சங்கிலியால் மனைவியை கட்டி வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இருவரும் அந்த பெண்ணை பீர் பாட்டிலால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் வந்து காப்பாற்றியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, அந்தப் பெண் கொடுத்த வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், தொழில் அதிபரையும், அவரது நண்பரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை பற்றிய விபரங்களை வெளியிடவில்லை.

பிலிப்பைன்சில் துப்பாக்கி சூடு

மணிலா : பிலிப்பைன்சில் பல்கலைக்கழக வாசல் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலையில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது, பல்கலை வாசல் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

latest tamil news

இந்த திடீர் தாக்குதலில், லமிடன் நகர முன்னாள் மேயர் ரோசிட்டா புரிகே, அவரது உதவியாளர் மற்றும் பல்கலை காவலாளி ஆகிய மூவரும் குண்டு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தனர்.புரிகேவின் மகள் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.இதையடுத்து, பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது.துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விசாரணைக் கைதி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.