புதுடெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் புபேந்திர யாதவ், கட்சியின் நல்லாட்சிப் பிரிவின் தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தனித்தும் கூட்டணி அமைத்தும் பாஜக ஆளும் 18 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் முதன்மையான திட்டங்களின் 100 சதவீத இலக்கை அடைவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, குஜராத் முதல்வர் புபேந்திர படேல், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், திரிபுரா முதல்வர் மாணிக் சாகா, நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதுபோல் மகாராஷ்டிராவின் தேவேந்திர பட்னாவிஸ், பிஹாரின் தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி உள்ளிட்ட துணை முதல்வர்களும் கலந்து கொண்டனர். -பிடிஐ