மளிகை பொருட்கள் முதல் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வரை வீட்டுக்கு டெலிவரி செய்யும் நிலை தற்போது வந்துவிட்டது.
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அனைத்து பொருட்களும் வீட்டில் இருந்து வாங்கி கொள்ளலாம் என்ற நிலையில் தற்போது வங்கி சேவையும் வீடு தேடி வரும் நிலை வந்துவிட்டது.
முதல்கட்டமாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தனது சேவையை டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது என்பதும் ஊழியர்களுக்கு இதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இத்தனை நன்மைகளா? உடனே போஸ்ட் ஆபீஸ் போங்க!
தபால் நிலைய வங்கிச்சேவை
கிராமப்புறங்களில் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் வங்கிச் சேவைகளை வழங்கி வருகின்றன. தபால் நிலையங்களால் கிராமப்பகுதிகளில் வங்கி உள்கட்டமைப்பு கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
பயிற்சி
இந்தியா போஸ்ட்டின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, ஒவ்வொரு கிராமத்திலும் வீட்டு வாசலில் வங்கிச் சேவைகள் இப்போது கிடைக்கும் என்றும், சுமார் 1.90 லட்சம் தபால்காரர்கள் மற்றும் தபால் ஊழியர்களுக்கு கூடுதலாக மொபைல் வங்கியாளர்களாக பணியாற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மொபைல் வங்கியாளர்கள்
இந்த ‘மொபைல் வங்கியாளர்கள்’ இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) மற்றும் பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வாசல் வங்கி சேவைகளை வழங்குவார்கள் என்று இந்தியா போஸ்ட் அறிக்கை கூறுகிறது.
இந்தியா போஸ்ட்
தினந்தோறும் 1.36 லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்களில் இருந்து இந்தியாவில் உள்ள 1.10 லட்சம் கிராமப்புற மக்களுக்கு இந்தியா போஸ்ட் தனது வங்கி சேவையை செய்து வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் இந்தியா போஸ்ட்டின் வங்கி உள்கட்டமைப்பு கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
கிராமப்புற வங்கி சேவை
தபால் அலுவலகங்கள் வங்கிச் சேவைகளை வழங்குவதால், சராசரியாக ‘கிராமப்புற வங்கி சேவை மையத்திற்கான தூரம்’ 5-6 கிமீல் இருந்து 2.5 கிமீ தூரமாக குறைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டு வாசலில் வங்கிச்சேவை
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை (AePS) சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம், எந்தவொரு வங்கி வாடிக்கையாளருக்கும் வீட்டு வாசலில் வங்கிச் சேவைகளை வழங்கும் மிகப்பெரிய தளமாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் இயங்கி வருகிறது.
வீட்டு வாசலில் வங்கிக்கணக்கு
2021ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி 4.93 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 98 சதவீத கணக்குகள் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் வாடிக்கையாளர்களில் 90 சதவீதம் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்றும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
என்னென்ன சேவைகள்
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வழங்கும் சேவைகளில் சேமிப்பு/நடப்புக் கணக்குகள், பணப் பரிமாற்றம், மெய்நிகர் டெபிட் கார்டுகள், பில் செலுத்துதல், வணிகர்களுக்கான ஆதார் பே சேவை மற்றும் ஆயுள் மற்றும் பொதுக் காப்பீடு ஆகியவை அடங்கும்.
நேரடி பணப்பரிமாற்றம்
எந்தக் கணக்கிலிருந்தும் பணம் திரும்பப் பெறுதல் (AePS), எந்தக் கணக்கிலும் ரொக்க வைப்பு (நேரடி பணப் பரிமாற்றம்), மற்றும் பில்கள், இன்சூரன்ஸ் பிரீமியங்கள் மற்றும் கடன் EMIகளுக்கு பணமாக பணம் செலுத்துதல் ஆகியவை பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி செய்து வரும் சேவைகள் ஆகும்.
கிராம மக்களின் வரப்பிரசாதம்
அடிப்படை நிதி சேவைகளுக்கான எளிய மக்களின் அணுகலை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக வங்கியில்லாத மற்றும் குறைந்த வங்கி உள்ள கிராமப்புற பகுதிகளில், 2016 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறையின் கீழ் ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது என்பதும், இது கிராமப்புற மக்களின் வரப்பிரசாதமாக இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Doorstep banking services now available in every village: India Post
Doorstep banking services now available in every village: India Post | வீடு தேடி வரும் வங்கிச்சேவை: ஆரம்பித்து வைப்பது எந்த வங்கி தெரியுமா?