லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாசாரம் பெருகி வரும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெக் பூங்கா பகுதியில் நடந்து வந்த கார் கண்காட்சி ஒன்றில் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். இந்த சூழலில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீசார் கூறும்போது, லாஸ் ஏஞ்சல்சின் சான் பெட்ரோ பகுதியருகே உள்ள பெக் பூங்காவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. மொத்தம் 7 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.
எங்களுடைய நுண்ணறிவு பிரிவினர் பெக் பூங்காவில் சம்பவ பகுதியில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். பொது பாதுகாப்புக்கு எந்தவித இடையூறும் தற்போது இல்லை. பூங்காவானது தொடக்க கட்ட விசாரணை நிறைவடையும் வரை சில மணிநேரம் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 2 பேர் உயிரிழந்து உள்ளனர். காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு தரப்பினருக்கு இடையே பூங்காவில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி துப்பாக்கி சூடு நடந்திருக்க கூடும் என விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர் என லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை உயரதிகாரி கெல்லி முனிஜ் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்க கூடும். எனினும், ஒருவரும் கைது செய்யப்படவில்லை. 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் காயமடைந்தனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 7 பேரில் 3 பேர் குண்டடிபட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கெல்லி கூறியுள்ளார்.