தமிழகத்தின் திருவள்ளூர் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்தது தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதியின் உடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பிளஸ்-2 மாணவி விடுதியில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் “சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி” உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் என்பவரது மகள் சரளா (17) பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
இன்று காலை வழக்கம்போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார். பின்னர் அவர் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் மாணவி சரளா திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும்பொலிசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் சரளா பூச்சி கடித்து உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையில் உயிரிழந்த சரளா குறித்து அவர் தோழிகள் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாகவே சரளா மிகவும் சோகமாக காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் மாணவி சரளா எதோ பிரச்சனையில் இருந்திருக்கிறார் என தெரியவருகிறது.
தொடர்ந்து விசாரணை நடக்கும் நிலையில் பல புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.