புதுடெல்லி: உலகை உலுக்கி வரும் ஊழியர்கள் ராஜினாமா ஐடி நிறுவனங்களை தொடர்ந்து பாதித்து வருவது மீண்டும் உறுதியாகியுள்ளது. முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸில் ஒருபுறம் அதிக சம்பளத்துக்கு ஆட்களை ஐடி நிறுவனங்கள் தேர்வு செய்து வந்தாலும் வேலையை உதறித் தள்ளும் ஊழியர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதே விகிதத்தில் உள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. ஊழியர்களை நீக்கும் நடவடிக்கைகளிலும் நிறுவனங்கள் ஈடுபட்டன.
நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் நிறுவனங்களுக்கு நிர்வாகச் செலவு குறைந்தது. தற்போது கரோனா அச்சம் அகன்றுள்ள நிலையில் பொருளாதார சூழல் வேகமெடுத்து வருகிறது. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது.
இப்போது புதிய மாற்றமாக கடந்த ஆண்டு முதல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொத்து கொத்தாக ராஜினாமா செய்தனர். ஊழியர்கள் பெருமளவு ராஜினாமா செய்யும் போக்கு இந்த ஆண்டும் தொடர்கிறது. குறிப்பாக ஐடி துறையில் ஊழியர்கள் ராஜினாமா செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
இதனால் ஊழியர்களை தக்க வைக்க கூடுதலான சலுகைகள் மற்றும் சம்பள உயர்வு இந்த ஆண்டு வழங்கப்பட்டு வருகிறது. ஊழியர்களை ஈர்க்க சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தொடர்ந்து ஊழியர்கள் வேலையை விட்டு செல்லும் போக்கு தொடர்கிறது.
முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் கடந்த நிதியாண்டில் 85,000 பேர் புதிதாக பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டிலும் பணியாளர்கள் நியமனம் இந்த அளவில் தொடர்கிறது. ஆனால் ஒருபுறம் ஆட்கள் சேர்ப்பு நடக்கும் நிலையில் வேலையை விட்டு செல்லும்போக்கும் தொடர்கிறது.
ஆட்கள் சேர்ப்பு
இன்போசிஸ் 2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டின் முடிவுகளை வெளியிட்டு உள்ளது. ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான திட்டங்களைப் பெற்ற நிலையில் ஊழியர்கள் தேவை அதிகமாக இருக்கிறது. இன்போசிஸ் ஜூன் 30 உடன் முடிந்த 2023 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிதாக 21,171 ஊழியர்களைப் பணியில் சேர்த்து உள்ளது.
இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை ஏப்ரல் காலாண்டில் 3,14,015 ஆக இருந்த நிலையில் ஜூன் காலாண்டில் 3,35,186 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால் அட்ரிஷன் எனப்படும் ஊழியர்கள் வேலையை விட்டு விலகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் ஏப்ரல் மாதத்தில் 27.7 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் காலாண்டில் அட்ரிஷன் விகிதம் 28.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம் ஜூன் காலாண்டில் 21,000 பேருக்கும் அதிகமான ஊழியர்களையும் பணியில் சேர்த்துள்ளது. அதாவது ஒருபுறம் ஆட்கள் சேர்க்கப்பட்டு வந்தாலும் வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்ட செல்கிறது.
இன்போசிஸ் அட்ரிஷன் விகிதம் டிசம்பர் காலாண்டில் 25.5 சதவீதமாகவும், செப்டம்பர் காலாண்டில் 20.1 சதவீதமாகவும், ஜூன் காலாண்டில் 13.9 சதவீதமாக இருந்துள்ளது.