கேரளாவின் வயநாடு பகுதியில் உள்ள பன்றிகளின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில், அப்பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான உயர் பாதுகாப்பு தேசிய நிறுவனம் கண்டறிந்தது.
இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை, தொற்றுநோய் பாதித்த 300 பன்றிகளைக் கொல்ல வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள, தொற்று உறுதி செய்யப்பட்ட பன்றிகளும் கொல்லப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
ஏற்கெனவே இம்மாத தொடக்கத்தில் இத்தொற்று பாதிப்பு, உத்தரபிரதேசம், பீகார், வடகிழக்கு மாநிலங்களில் பதிவாகி இருந்தது. எனவே தொற்று வேகமாகப் பரவுவதைத் தடுக்க, அனைத்துவிதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் எடுக்கப்படும் என அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் எளிதாக பிறருக்குப் பரவக் கூடிய ஒருவித வைரஸ் தொற்று. இது காட்டுப் பன்றிகளையும், வீட்டில் அல்லது பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளையும் பாதிக்கும். ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு போதுமானதாக இல்லாததால் மூக்கு, காதுகள், வால் மற்றும் கால்களின் கீழ் தோல்பகுதியானது ஊதா நிறமாக மாறும். காய்ச்சல் அதிகரித்து மூக்கு மற்றும் கண்களில் இருந்து திரவம் வெளியேறும்.
இந்த வைரஸ் எல்லா சூழ்நிலையிலும் வாழும் எதிர்ப்புத்திறனைக் கொண்டுள்ளதால் எளிதாக துணிகள், மேசை, நாற்காலி உள்ளிட்டவை, சக்கரங்கள், உலோகங்களிலும் தொற்றி எளிதாக வாழும். இந்நோய் பாதித்தால் 100 சதவிகிதம் இறப்பு ஏற்படும்.
இத்தொற்றினால் மனிதர்களின் ஆரோக்கியத்தில் எவ்வித பிரச்னைகளும் ஏற்பட போவதில்லை என்றாலும், இந்தியா, பன்றி வளர்ப்பில் பெருமளவில் லாபத்தை ஈட்டி வருவதால், விவசாய பொருளாதாரம் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும்.
இந்நிலையில், ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் எவ்வாறு பரவியது என்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை விசாரிக்கத் தொடங்கியது. தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டதற்கு முன்பே நாற்பதுக்கும் மேலான பண்ணை பன்றிகள் ஜூன் மாதத்தில் இறந்துள்ளது அதில் தெரியவந்துள்ளது. பண்ணையில் உள்ள மற்ற பன்றிகளும் இறந்துள்ளன. ஆனால் பன்றிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை.
மற்றொரு தகவலில், பண்ணை உரிமையாளர் பண்ணையில் மீதமிருந்த பாதிக்கப்பட்ட பன்றிகளைக் கொன்றுள்ளார். அவற்றை முறைப்படி புதைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் பிற பகுதிகளிலும் இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மற்ற மாநிலங்களில் இருந்து கேரளாவில் வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் மூலமாகவும் இந்தத் தொற்று பரவியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. தொழிலாளர்களின் துணிகள், காலணிகள் போன்றவற்றில் தொற்றிக்கொண்டு நோய் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.