கள்ளக்குறிச்சி சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே மனதில் இருந்து விலகாத நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவந்த மாணவி அந்தக் கல்லூரியின் மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் இங்கு இளங்கலை மருந்தகவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், வழக்கம் போல இன்று கல்லூரிக்கு வந்திருந்த அந்த மாணவி, நண்பகல் நேரத்தில் திடீரென கல்லூரியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்திருக்கிறார். அதில் பலத்த காயமடைந்த அந்த மாணவியை, கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாக மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதையடுத்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் இருக்க, கல்லூரி மற்றும் மருத்துவமனை பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும், திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா, விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன் ஆகியோரின் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு முதுகின் கீழ்ப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சற்றுமுன்னர் அதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. மாணவியிடம் நேரில் விசாரிப்பதற்காக திண்டிவனம் நீதிபதி, முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரிக்கு சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.