கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ்.
21 வயதான விமல்ராஜ், சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ஆம் ஆண்டு படித்துவந்தார். கபடி வீரரான விமல்ராஜ், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்றுவந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு (ஜூலை 24) பண்ருட்டி அருகேயுள்ள மாண்டிகுப்பத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இந்த கபடி போட்டியில் விமல் ராஜ் கலந்துகொண்டார். போட்டியில் ரைடு சென்று திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போட்டி நிர்வாகத்தினர் மற்றும் இதர விளையாட்டு வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு விமல் ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கபடி ஆட்டத்தில் வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து முத்தாண்டிக்குப்பம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கபடி வீரர் விமல் ராஜின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”