புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளியை பள்ளிக் கல்வித் துறை மூடபோவதாக அப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள், பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒருகட்டத்தில் முதல்வர் இல்லம் சென்று அங்கிருந்த முதல்வர் ரங்கசாமியிடம் மாணவ, மாணவிகள் கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் காவலர் குடியிருப்பு பகுதியில் 30 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது இந்திரா காந்தி அரசு உயர் நிலைப் பள்ளி. இப்பள்ளியில் கடந்த காலங்களில் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது 600 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதால் இப்பள்ளியை மூடிவிட்டு இதில் படிக்கும் மாணவர்களை வேறு அரசு பள்ளி உடன் இணைக்க புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகவலை அறிந்த அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்களின் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வாயிலில் அமர்ந்து தங்களின் பள்ளியை மூடும் முடிவை பள்ளி கல்விக் துறை உடனடியாக கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தில் பெற்றோர்கள், சமூக அமைப்பினரும் பங்கேற்றனர். ஒரு கட்டத்துக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் திலாஸ்பேட்டிலுள்ள முதல்வர் வீட்டுக்கு சென்றனர். அங்கு முதல்வர் ரங்கசாமி, ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், ரமேஷ் உள்ளிட்டோர் இருந்தனர். தங்கள் பள்ளியை மூடக் கூடாது. நாங்கள் மட்டுமல்ல வருங்காலத்தவரும் இங்கு படிக்கவேண்டும் என்று குறிப்பிட்டனர்.
பள்ளியை ஏன் மூடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ரங்கசாமி விளக்கம் தந்தார். பின்னர் முதல்வர் ரங்கசாமி பள்ளியின் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம், குறைந்த மாணவர்களுக்கு அதிக ஆசிரியர்கள் தொடர்பாக கேள்வி எழுப்ப, மாணவ, மாணவிகள் பதில் தந்தனர்.
பள்ளியைத் தொடர நடவடிக்கை எடுக்கக் கோரினர். இறுதியில் இதுபற்றி அதிகாரிகள், ஆசிரியர்களிடம் பேசி முடிவு எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.