நய்பிடாவ்: மியான்மரில் சமூக செயற்பாட்டாளர், முன்னாள் எம்.பி உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவத்தினர் ஆட்சியில் உள்ளனர். இந்த நிலையில், மியான்மரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை, ராணுவத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூக்குத் தண்டனை நிறைவேற்றியவர்களில் சமூக செயற்பாட்டாளர் கோ ஜிம்மி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபியோ ஜெயா தாவ் ஆகிய இருவரும் அடங்குவர். இந்த மரணத் தண்டனையை ஆங் சான் சூச்சியின் ஜனநாயகக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நால்வரின் குடும்பத்தினரும் தகவல் அறிந்து சிறைக்கு வெளியே கூடியிருந்ததால் அங்கு பதற்றம் நிலவியது.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட ஃபியோ ஜெயா தாவ் தாயார் பேசும்போது, “நான் எனது மகனை வெள்ளிக்கிழமையன்று காணொலியில் பார்த்து பேசினேன். என் மகன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தான். அவன் என்னிடம் படிப்பதற்கு கண்ணாடியையும், செலவுக்கு பணமும் கேட்டிருந்தான். அதனை எடுத்து கொண்டுதான் நான் சிறைக்கு வந்தேன்” என்றார்.
குடும்பத்தினருக்கு தகவல் ஏதும் அளிக்காமல் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய மியான்மர் ராணுவத்தை அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.