திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் அவரின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பிளஸ்-2 மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. அந்த பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சக மாணவிகள் விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று மாணவி சரளாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மாணவியின் திடீர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதையடுத்து உடனடியாக மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சரளாவின் உடலுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை சற்றுமுன்னர் முடிவடைந்தது. அதன் முடிவுக்கு பின்னரே இது கொலை அல்லது தற்கொலையா என்பது குறித்து சொல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதன்படி தற்கொலைக்கான காரணம் தெரிந்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.