`சமையலில் உங்களுக்குப் பிடிக்காத காய் எதுவென்று கேட்டால், தயங்காமல் பலரும் சொல்வது, சுண்டைக்காயைத்தான். ஆனால், அதன் பயன்களை அறிந்தால், அது உங்களின் ஃபேவரைட்டாக மாறக்கூடும்; மாற வேண்டும் என்பதே என் ஆசை!
`சுண்டக்கா மாதிரி இருந்துகிட்டு என்ன வேல பண்றான் பாரு…’ எனும் பழமொழி நம்மிடையே பிரசித்தம்! ஆனால், மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பார்கள். அது இதற்குப் பொருந்தும். சுண்டைக்காய் குட்டியாக, இருந்தாலும் அது கொடுக்கும் நன்மைகள் தனித்துவமானவை.
சுண்டையின் அருமை பெருமைகளை அறிந்துகொள்வோமா நண்பர்களே? வயிற்றில் இருக்கும் கிருமிகளை அழித்து, செரிமான பாதையைப் பாதுகாக்கும் அசகாய சூரன்தான் சுண்டை. இதன் காய்கள் சுண்டிவிடும் தன்மை உடையதால், `சுண்டை’ என்ற பெயர் உருவாகியிருக்கலாம்.
மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது சுண்டை. இதன் வகைகளில் மலைச்சுண்டை அதிக கசப்பைக் கொண்டது, வீட்டுத் தோட்டங்களில் வளரும் பால் சுண்டைக்கு கசப்புத்தன்மை சிறிது குறைவு. காட்டுச் சுண்டை, நஞ்சுச் சுண்டை, குத்துச் சுண்டை போன்ற வகைகளும் உள்ளன.
சுண்டைக்காய் வற்றல்:
வற்றல் ரகங்களிலேயே மிகவும் ஃபேமஸ் என்றால் அது நம்ம சுண்டைக்காய் வற்றல்தான்! நோய் நீக்கும் வற்றல் வகையறாவில் எப்போதுமே முதல் பரிசு சுண்டை வற்றலுக்குத் தான். உலர்ந்த சுண்டைக்காய்களை அப்படியே பிளந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தயிரில் கலந்து வெயிலில் காய வைத்து, நன்கு உலர்த்தி வற்றலாகச் செய்துகொள்ளலாம்.
வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், சுவையின்மை போன்ற செரிமானம் சார்ந்த அறிகுறிகளைக் குணமாக்க, சுண்டை வற்றல் இருந்தால் போதும்.
சுண்டைக்காய் வற்றல், வயிற்றில் தங்கிய புழுக்களை உடனடியாக வெளித்தள்ளும். கழிச்சல் நோயைக் கட்டுக்குள் வைக்க சுண்டை வற்றலை நன்றாகப் பொடி செய்து, தயிரில் கலந்து சாப்பிடலாம். சில நேரங்களில் சோர்வாக இருக்கும் மந்தமான வயிற்றின் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் சுண்டை வற்றல் உதவுகிறது.
புளிக்குழம்பு:
`சுண்டைக்காய் புளிக் குழம்பு’ பலரின் விருப்பமான உணவு. கசப்புச்சுவை இருப்பதாகக் கருதினால், பனைவெல்லம் சேர்த்து சமைத்து சாப்பிட்டலாம். இதனால் கசுப்புச்சுவை அவ்வளவாகத் தெரியாமல் சுண்டையின் முழு பயன்களையும் அடைய முடியும். முதிர்ந்த சுண்டையின் பழங்களை அரைத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குறையும்!
சுண்டை வற்றல் சூரணம்:
`சுண்டை வற்றல் சூரணம்’ எனும் சித்த மருந்தைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம். குடல் சார்ந்த பெரும்பாலான பிரச்னைக்கு இந்த சுண்டை வற்றல் சூரணம் சிறந்த மருந்தாகப் பயன்படும். சுண்டை வற்றல் சூரணத்தை சிறிதளவு மோரில் கலந்து பருக, குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
உங்கள் செரிமானம் முழுமையாக நடைபெற நலம் பயக்கும் நுண்கிருமிகள் மிக அவசியம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகளுக்கு சுண்டைவற்றல் சூரணம் நம்மிடம் இருந்தால் போதும்.
புழுக்களைக் கொல்லும்:
பிள்ளைகளின் மலத்தில் புழுக்கள் தென்பட்டால், சுண்டைக்காய் பொடியாக்கி தரலாம். மாதம் இரு முறை சுண்டை சேர்ந்த உணவுகளைச் சேர்த்து வந்தால், செரிமானத் தொந்தரவுகள், உணவு எதிர்த்தெடுத்தல், ஆசனவாய் எரிச்சல், வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் நிச்சயம் துன்புறுத்தாது.
இதன் காய்களுக்கு, நுண்ணுயிர்க்கொல்லி செய்கை (Anti-microbial) இருப்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. சுண்டையில் உள்ள டார்வனால் (Torvanol) மற்றும் டார்வோசைடு (Torvoside) போன்ற தாவர வேதிப்பொருள்கள், சில வகையான வைரஸ்களுக்கு எதிராகச் செயல்பட உதவுகிறது. அதிக அளவு அமிலச் சுரப்புகளில் இருந்து வயிற்றுத்தசைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் திரவத்தை (Mucus) சுரக்கச் செய்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் (Anti-ulcerogenic) இதன் இலைச் சாறு தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தனிமங்களும் சுண்டையில் அதிகம்.
உணவின் சத்துக்களை உறிஞ்ச:
`என்ன சாப்பிட்டாலும் உடம்புல ஒட்ட மாட்டேங்குதே’ என்று புலம்புகிறீர்களா! சுண்டைக்கும் அவ்வப்போது உணவில் இடம் அளிக்கத் தொடங்குங்கள்… உங்களுக்குப் பிடித்த வகையில் சுண்டையை சமைத்துக் கொடுக்கச் சொல்லுங்கள். உணவின் சாரங்கள் முறையாக உறிஞ்சப்பட்டு, சதை பிடிக்க ஆரம்பித்துவிடும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், வெந்தயம், மாதுளை ஓடு, சீரகம், கறிவேப்பிலை… இவற்றை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, ஐந்து சிட்டிகை அளவு மோரில் கலந்து அருந்த, கழிச்சலும் ஆசனவாய் எரிச்சலும் குறையும். மேலும், பசியைத் தூண்டுவதற்காகப் பயன்படும் சித்த மருந்துகளில் சுண்டைக்காய் சேர்க்கப்படுகிறது. சுண்டை இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களில் வைத்துக் கட்டலாம்.
வயிற்றுக்குள் குத்தாட்டம் போடும் குடற்புழுக்களை அழித்து, செரிமானப் பகுதியை சுத்தம் செய்ய, சுண்டையைவிட சிறந்த உணவு இல்லை என்பதை இப்போதைய தலைமுறையாகிய நீங்களும் புரிந்துகொண்டால் செரிமான நோய்கள் தலைகாட்டாது. சுண்டைக்காயின் மகிமையைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்!
தாவரவியல் பெயர்:
Solanum torvum
குடும்பம்:
Solanaceae
கண்டறிதல்:
ஓரளவு வளரும் பெருஞ்செடி வகை. அகன்று விரிந்த இலைகளில் சிறிய பிளவுகள் காணப்படும். வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். காய்கள் கொத்துக் கொத்தாய் காய்க்கும். முட்கள் கொண்ட தாவரம்.
தாவரவேதிப் பொருள்கள்:
Rutin, Kaempferol, Quercetin, Solagenin.
சுண்டைக்காய்… பெரிய நோய்களை விரட்டும் குட்டி சூரன்!