நம் அனைவருக்கும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சிறப்பாக இருந்தாலும், பல நாட்கள் மோசமாகி விடுகின்றன. நீங்களும் அந்த ‘கெட்ட நாட்களில்’ ஒன்றை அனுபவித்து கொண்டிருந்தால், சில லைஃப் ஹேக்ஸ் இங்கே உள்ளன, அவை நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை ஒரு மென்மையான அனுபவமாக மாற்ற உதவும்.
சர்க்கரை, வெங்காயம், உப்பு எப்போதும் நம் கிச்சனில் இருக்கக் கூடிய ஒன்று. ஆனால் இவை வெறும் சமையலுக்கு மட்டுமில்லாமல், செடிகளில் பூச்சி வராமல் தடுக்க, பாத்திரங்களை சுத்தம் செய்ய, பிளெண்டர் பிளேடுகளை கூர்மைப்படுத்த என பல வழிகளில் பயன்படுத்தலாம். தெரிந்துகொள்ள படியுங்கள்!
பூச்சி வராமல் தடுக்க
சர்க்கரை, தண்ணீர் மற்றும் போராக்ஸ் ஆகியவற்றை சம அளவில் கலந்து, நீங்களே கிருமிநாசினி தெளிப்பை உருவாக்கி, உங்கள் செடிகளை எறும்புகள் மற்றும் தேவையற்ற பூச்சிகளிடமிருந்து காப்பாற்றலாம். கரைசலில் சிறிது காட்டனை ஊறவைத்து, உங்கள் செடிகளைச் சுற்றி எறும்புகள் மற்றும் பூச்சிகளைக் காணும் இடத்தில் வைக்கவும், சர்க்கரை அவற்றை ஈர்க்கிறது மற்றும் போராக்ஸ் அவற்றை உடனடியாகக் கொல்லும்.
சுத்தம் செய்ய
பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் எரிந்த உணவை சுத்தம் செய்வது பெரிய வேலை. கை வலிக்க பானையை தேய்த்தாலும் எரிந்த கறை முழுமையாக நீங்காது. எனவே வாணலிகள் மற்றும் பானைகளில் எரிந்த உணவை சுத்தம் செய்ய உப்பு பயன்படுத்தவும்.
சோப்பு நீரில் அழுக்கு பாத்திரங்களை ஊறவைப்பதற்கு பதிலாக, பாத்திரத்தின் அடியில் சிறிது உப்பு சேர்க்கவும். 10 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் வழக்கம் போல் சுத்தம் செய்யவும்.
பிளெண்டர் பிளேடுகளை கூர்மைப்படுத்த
அதிகப்படியான பயன்பாடு பிளெண்டர் கத்திகளை மழுங்கச் செய்துவிடும். கல் உப்பைப் பயன்படுத்தி உங்கள் பிளெண்டரின் பிளேடுகளை கூர்மையாக வைத்திருக்கலாம். உங்கள் பிளெண்டரில் சிறிது கல் உப்பை வைத்து, உங்கள் பிளேடுகள் கூர்மையாக இருக்க, ஒரிரண்டு முறை அடிக்கவும்.
முட்டையிலிருந்து மஞ்சள் கரு பிரிக்க
முட்டையிலிருந்து மஞ்சள் கருவை பிரிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இங்கு ஒரு சிம்பிள் டிரிக் உள்ளது. முட்டையை உடைத்து கிண்ணத்தில் ஊற்றவும். வெற்று தண்ணீர் பாட்டிலை எடுத்து அதன் வாயை, மஞ்சள் கருவின் மேல் வைத்து, பாட்டிலை லேசாக அழுத்தவும். மஞ்சள் கரு எந்த பிரச்சனையுமின்றி உங்கள் பாட்டிலுக்குள் செல்லும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்.
துருப்பிடித்த கத்தி
வெங்காயம் அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. உங்களிடம் துருப்பிடித்த சமையலறை கத்தி இருந்தால், அதை ஒரு பெரிய வெங்காயத்தில் திணித்து சிறிது நேரம் வைக்கவும். கத்தியை வெளியே இழுக்கும்போது, துரு நீங்கியிருப்பதைக் காண்பீர்கள்.
அதேபோல, அரைத்த வெங்காயத்தை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். இந்த கலவையை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி செடிகளின் மேல் தெளிக்கவும். இது அதன் விரும்பத்தகாத வாசனையால் பூச்சிகளை விலக்கி வைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“