மைசூரு, ; ம.ஜ.த., தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்த, சாமுண்டீஸ்வரி எம்.எல்.ஏ.,வான ஜி.டி.தேவகவுடாவை மற்றொரு எம்.எல்.ஏ.,வான சா.ரா.மகேஷ் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.மைசூரின் சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., கட்சியின் எம்.எல்.ஏ., – ஜி.டி.தேவகவுடா, சில ஆண்டுகளாக கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். கட்சி கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. மனதளவில் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அடுத்த சட்டசபை தேர்தலுக்குள், இவர் காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.இதற்கு முன் இவரை ம.ஜ.த., மேலிடம் பொருட்படுத்தவில்லை. ‘கட்சியை விட்டு செல்பவர் செல்லட்டும்’ என, முன்னாள் முதல்வர் குமாரசாமி அலட்சியமாக கூறியிருந்தார். ஆனால் ஜி.டி.தேவகவுடா, மைசூரின் செல்வாக்கு மிக்க தலைவர். முதல்வராக இருந்த சித்தராமையாவையே தோற்கடித்தவர். இந்த தொகுதியில் மாற்று வேட்பாளரை தேடுவது கடினம். இதை மனதில் கொண்டு, ஜி.டி.தேவகவுடாவை கட்சியில் தக்க வைத்துக்கொள்ள முயற்சி நடக்கிறது.
இந்நிலையில் மைசூரின், ‘ஜலதர்ஷிணி’ விருந்தினர் இல்லத்தில், ஜி.டி.தேவகவுடாவை, ம.ஜ.த., எம்.எல்.ஏ., – சா.ரா.மகேஷ், நேற்று முன் தினம் சந்தித்தார். மற்ற தலைவர்களை வெளியே அனுப்பிவிட்டு, இருவரும் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக, தகவல் வெளியாகியுள்ளது.வரும் 2023 சட்டசபை தேர்தலில், சாமுண்டீஸ்வரி தொகுதியில், ஜி.டி.தேவகவுடாவுக்கும், ஹுன்சூர் தொகுதியில் அவரது மகன் ஹரிஷுக்கும் சீட் தருவதாக உறுதி அளித்து, சா.ரா.மகேஷை துாதுவராக குமாரசாமி அனுப்பியதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement