‘மெட்டாவெர்ஸ்’ என்னும் மெய்நிகர் தொழில்நுட்பம், தொழில்நுட்ப உலகில் பரவலாகப் பேசுபொருளாகி உள்ளது. இப்போதுள்ள ‘வெர்சுவல் ரியாலிட்டி, அகுமென்டட் ரியாலிட்டி, மிக்ஸ்ட் ரியாலிட்டி’ ஆகியவற்றைத் தொடர்ந்து ‘மெட்டாவெர்ஸ்’ என்னும் அனைத்தையும் உள்ளடக்கிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனம் எனில் அதற்குத் தொலைபேசி அவசியம் தேவைப்பட்டது. நாளடைவில் சாதாரண தொலைபேசி பயன்பாடு குறைந்து, வலைத்தளம், மின்னஞ்சல் முகவரி மூலமாக நிறுவனங்களைத் தொடர்புகொள்ள முடிந்தது.
சமூக ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்குத் தளமாக மட்டும் இல்லாமல், திறமைகளை வெளி உலகுக்குக் காட்டும் தளமாகவும், நிறுவனங்கள் தங்கள் வணிகத்தைச் சந்தைப்படுத்தும் தளமாகவும் பரிணமித்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில் ‘மெட்டாவெர்ஸ்’ என்னும் இந்தப் புதிய தொழில்நுட்பம் பயனர்களுக்கு மெய்நிகர் தொழில்நுட்பத்தை அடுத்த படிநிலைக்கு எடுத்துசெல்ல இருக்கிறது. இதன்மூலம், தகவல் தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓர் உலகத்துக்கே நொடிப்பொழுதில் ஒருவரை அழைத்துச்செல்ல முடியும். மனிதன் கண்ணால் பார்ப்பதை வைத்தே மூளை செயல்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அனுபவம் வாயிலாக மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தை அனுபவித்து உணர முடியும். இது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படாமல் ஆரோக்கியம் தொடர்பான பயன்பாட்டுக்கும் வர இருக்கிறது.
உதாரணமாக, மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்க்க இயலாதவர்கள் இதன் மூலம் வெகு தொலைவில் உள்ள மருத்துவரை உடனடியாக மருத்துவமனைக்கே சென்று பார்த்த அனுபவத்தைப் பெற முடியும்.
இனி வருங்காலத்தில் தொழிற்சாலைகளில் புதிதாகச் சேரும் பணியாளர்களை நேரடியாக விலை அதிகமான இயந்திரங்களில் வேலை செய்ய வைப்பதைத் தவிர்த்து ‘மெட்டாவெர்ஸ்’ தொழில்நுட்பம் மூலம் முழு தொழிற்சாலையையே பொருள்களுடன் செயற்கையாக உருவாக்கி, அதில் பணியாளர்களுக்குப் பயிற்சி கொடுக்கலாம். அப்போது பெரும் பொருட்சேதங்களும் அபாயங்களும் தவிர்க்கப்படும். தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம்.
> இது, தரவு அறிவியல் உதவிப் பேராசிரியர் இரா.இராஜ்குமார் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்