இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3.4 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிப்பொருட்களை வெளிவிவகார அமைச்சர் கௌரவ அலி சப்ரி, சுகாதாரத் துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் 2022 ஜூலை 26 ஆம் திகதி கொழும்பில் கையளித்தார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
2. 16,594 மெட்ரிக்தொன் அரிசி, 200 மெட்ரிக்தொன் பால்மா, கிட்டத்தட்ட 38 மெட்ரிக் தொன் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட இந்த மனிதாபிமானப் பொருட்கள் தமிழக அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 22 மில்லியன் அமெரிக்க டொலர் மொத்த பெறுமதியில் வழங்கப்பட்ட 40000 மெட்ரிக்தொன் அரிசி, 500 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் அடங்கிய தொகுதியின் மூன்றாம் கட்டமாக இப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நீர் வெறுப்பு நோய் தடுப்பூசிகள் 25000 உள்ளிட்ட முக்கியமான மருந்துகளும் இதில் உள்ளடங்குகின்றன.
3. 2022 ஜூலை 26 ஆம் திகதி கையளிக்கப்பட்ட இந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்தால் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதுடன் எதிர்வரும் நாட்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பயனாளர்களைச் சென்றடையவுள்ளது.
4. இலங்கை மக்களின் பரந்தளவான தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை மக்களுடன் துணைநிற்கும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்திய மக்களும் தமது ஆதரவை வழங்குகின்றனர். இந்த ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் இலங்கை மக்களுக்காக வழங்கப்பட்ட 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் பன்முக ஆதரவானது, இலங்கையிலுள்ள தமது சகோதர உறவுகளுக்காக தாராளமான நன்கொடையினை வழங்கிய பல்வேறு மருத்துவமனைகள், இலங்கையில் உள்ள இந்திய சமுதாய அமைப்புகள் மற்றும் இந்தியாவில் உள்ள ஏனைய பல அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான முன்னெடுப்புகளால் மேலும் வலுவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இலக்குகளை நோக்கி இந்திய மக்களும் அரசாங்கமும் ஒன்றிணைவதானது, இந்திய இலங்கை மக்களிடையிலான பிணைப்பினையும், பரஸ்பர அக்கறை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றையும் சுட்டிக்காட்டுகிறது.