அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையத்தின் ஆய்வின்படி, கோவிட் நான்காவது டோஸ் தடுப்பூசியானது ஒமிக்ரான் பி.ஏ 1,பி.ஏ 2 திரிபுகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்தத் திரிபுகளுக்கு எதிராக 68% நோய் எதிர்ப்புசக்தி இருந்தது. ஆனால் 6 மாத காலத்தில் அது 52% ஆகக் குறைந்துவிட்டது.
நான்காவது டோஸ் செலுத்திக்கொள்பவர்களுக்கு 80% ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாவது டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (The Central Drugs Standard Control Organisation (CDSCO) பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான அனுமதியை அளிக்கவில்லை. அதற்கு அனுமதி கோரிய விண்ணப்பமும், எங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் அங்கீகரிக்கபட வேண்டுமென்றால் முதலில், CDSCO அமைப்பில் ஒப்புதல் விண்ணப்பத்தை தாக்கல் செய்து, அதற்கு அந்த அமைப்பு ஒப்புதல் அளித்த பிறகுதான், மருந்து விற்பனை செய்யப்பட வேண்டும்.
மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளிக்காத நிலையில், மத்திய மாநில அரசுகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது எதன் அடிப்படையில் என்ற கேள்வி எழுகிறது.
இதுபற்றி மருத்துவரும் சமூக ஆர்வலருமான புகழேந்தியிடம் பேசினோம்:
நான் தடுப்பூசி எதிர்ப்பாளர் இல்லை. ஆனால் தடுப்பூசிக்கு அறிவியல் ரீதியான அங்கீகாரம் வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருகிறேன். முதலில், தடுப்பூசி செலுத்தினால் பலன் இருக்கிறதா என்று உறுதிசெய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தினால் பின்விளைவுகள் ஏற்படுமா என்பதனை ஆராய வேண்டும்.
ஆரம்பகட்டத்தில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இல்லை. அது முற்றிலுமாக உருமாறிவிட்டது. அப்படி உருமாறிய வைரஸுக்கு எதிராக இந்தத் தடுப்பூசிகள் வேலை செய்யும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் வேண்டும்.
பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளியை ஒன்பது மாதங்களில் இருந்து தற்போது 6 மாதங்களாகக் குறைத்துள்ளனர். காலத்தின் தேவை கருதிதான் இதனை குறைத்துள்ளார்கள். ஆனால், இந்த இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தினால் கொரோனா தொற்று ஏற்படாது என்று உறுதி செய்ய வேண்டுமல்லவா?
தற்போது இந்தியாவில் பரவி வரும் வைரஸ் தொற்றினை சிற்றலை (Ripple) என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அலையைவிடப் பரவும் வேகம் குறைவாக இருக்கும் என்பதால் அதனை சிற்றலை என்கிறார்கள். இந்தியாவில் தற்போது ஒமிக்ரானாக உருப்பெற்றுவிட்டது, ஒமிக்ரான் வைரஸில் பி.ஏ4,பி.ஏ5 என்ற வகைகள் இருக்கின்றன. தற்போது பி.ஏ 2.75 என்ற புதுவகை உருவாகியுள்ளது. அதனை சென்டாரஸ் (centaurus) என்று குறிப்பிடுகிறார்கள்.
தமிழகத்தில் முக்கியமாக பி.ஏ4,5 ஆகிய வகைகள் பரவியுள்ளன. தற்போது பி.ஏ 2.75 என்ற வகையும் தமிழகத்திற்கு வந்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இது குறித்து எவரும் பேசவில்லை. பி.ஏ4,5 யில் இரண்டு வகையான உருமாற்றம் நடக்கும். பி.ஏ 5-யால் சுவாச மண்டலத்தில் அதிகமாக பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
பி.ஏ 2.75 வகை தடுப்பூசிக்கு கட்டுபடாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறுகின்றனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு, CDSCO அனுமதி அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் அறிவியலுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. அரசியலுக்கு தான் மதிப்பு இருக்கிறது” என்றார்.
தடுப்பூசி எடுத்துக்கொள்வது தொடர்பாக தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம். “பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள அரசு அறிவுறித்தி இருக்கிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினைக் கட்டாயம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது பல வகையான ஒமிக்ரான் திரிபுகள் பரவுகின்றன. அவற்றை எதிர்கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம். தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனாவின் தாக்கம் குறைவாகதான் இருந்துள்ளது. எங்களைப் போன்ற மருத்துவர்களின் வட்டத்தில் பலர், பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதால்தான் பலருக்கு கொரோனா பாதிப்பு குறைவாக ஏற்பட்டுள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் சாதாரண சளி, இருமல் மட்டும்தான் ஏற்படும். உயிரிழப்பு அளவுக்குப் போகாமல் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். அதனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. ஃப்ளூ (FLU) வைரஸுக்கான தடுப்பூசியைப் போன்று கொரோனா தடுப்பூசியில் அந்தந்த வகைகளுக்கென தனியாக தடுப்பூசி வரவில்லை. பல நிறுவனங்கள் அந்தந்த வகைகளுக்கென தனியாக தடுப்பூசியைத் தயாரித்து தருவதாகக் கூறியுள்ளன” என்று கூறினார்.