மும்பை: கொரோனா, குரங்கம்மை பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 142 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா, குரங்கம்மை பாதிப்புக்கு மத்தியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மும்பையில் 43 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேவில் 23 நோயாளிகளுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதியாகி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 30 முதல் 35 பேர் பன்றிக் காய்ச்சலால்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதம் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஏழு நோயாளிகள் இறந்துள்ளனர்; நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 24ம் தேதி மொத்தம் 1,66,132 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மும்பையில் அதிகரித்து வரும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, மும்பை மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் மங்கள கோமரே கூறுகையில், ‘பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால், மாநகராட்சி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டியது போல், பன்றிக் காய்ச்சலிலும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம். பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்க, மக்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். குரங்கம்மை நோய் தடுப்புக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.