புது டெல்லி: உயிர்காக்கும் மருந்துக்கு பற்றாக்குறை எனக் கூறி, டெல்லியில் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் அலுவலகத்தின் முன் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்தியாவில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகள் தனிநபர்களுக்கான ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை மையங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 14.5 லட்சம் பேருக்கு நாட்டில் உள்ள 680 மையங்கள் மூலம் இந்த உயிர்காக்கும் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தை இலவசமாக வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த மருந்துகள் அரசின் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் போராட்டத்தை நோயாளிகள் முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.
மருந்து பற்றாக்குறை தொடர்பான குற்றச்சாட்டை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அனைத்து சிகிச்சை மையங்களிலும் மருந்து கைவசம் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சிகிச்சை மையங்களின் சார்பில் அடுத்த கையிருப்புக்கான ஆர்டர் ஏற்கெனவே கோரப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் அந்த மருந்தின் விநியோகத்தை விரைந்து மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த மூன்று மாதத்திற்கு வேண்டிய TLD எனும் மாத்திரை நாடு முழுவதும் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.