சேலம்: ‘சேலத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் கோபி (45). இவர் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். சேலம், சித்தர் கோயில் பகுதியை சேர்ந்த பிஎச்டி பயிலும் மாணவிக்கு பதிவாளர் கோபி நெறியாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி ஆய்வுக்கட்டுரை சரி பார்க்க வேண்டி, மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்புக்கு பதிவாளர் கோபி அழைத்து, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது.
இது சம்பந்தமாக கருப்பூர் காவல் நிலையத்தில், மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவாளர் கோபியை போலீஸார் கைது செய்து, நேற்று இரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், பாலியல் தொல்லை வழக்கில் சிக்கி கைதான பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.