இந்தூர் : மத்திய பிரதேசத்தில், முதலாமாண்டு மாணவர்களை வக்கிரமாக ‘ராகிங்’ செய்தது அம்பலம் ஆகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களை, தங்கள் அறைக்கு அழைத்த சீனியர் மாணவர்கள், ‘தலையணையுடன் உறவு’ வைத்துக் கொள்ளுமாறு ராகிங் செய்துள்ளனர். மேலும், மாணவியர் சிலரின் பெயரைக் கூறி அவர்களைப் பற்றி ஆபாசமாக பேசுமாறும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.இது தொடர்பாக, பேராசிரியர்களிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என முதலாமாண்டு மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு மற்றும் தேசிய ராகிங் தடுப்புக் குழு ஆகியவற்றுக்கு முதலாமாண்டு மாணவர்களில் சிலர் போன் வாயிலாக புகார் செய்தனர். கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட யு.ஜி.சி., அதிகாரிகள் இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்குமாறும், சீனியர் மாணவர்கள் மீது போலீசில் புகார் செய்யுமாறும் உத்தரவிட்டனர். இதையடுத்து, போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்தூர் போலீசார் முதலாமாண்டு மாணவர்களிடம் வாக்குமூலம் வாங்கும் பணியை துவக்கியுள்ளனர். ஏராளமான ‘வீடியோ’ மற்றும் ‘ஆடியோ’ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், வக்கிரமாக ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement