திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ள விழாவின்போது மாட வீதிகளில் காலையும், மாலையும் வாகன சேவை நடைபெறும்.
குறிப்பாக 27-ம் தேதி கொடியேற்றமும், அன்றிரவு பெரிய சேஷ வாகன சேவையும் நடைபெறும். 5-ம் நாளான அக்டோபர் 1-ம் தேதி 3-வது புரட்டாசி சனிக்கிழமை இரவு கருட சேவை நடைபெறும். இந்நிலையில் மாட வீதிகளின் பாதுகாப்பு குறித்து திருப்பதி நகர எஸ்பி பரமேஸ்வர் ரெட்டி, தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் ஆகியோர் தலைமையில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.
மாட வீதிகள் உட்பட கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு தடை விதிப்பது, கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்குவது, ஆக்டோபஸ் கமாண்டோ படை, ஆயுதப் படை, மாநில போலீஸார், தேவஸ்தான கண்காணிப்பு படை என சுமார் 5 ஆயிரம் போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஆலோசனைகள் நடத்தப்பட்டன.