டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஏற்கனவே 2 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியிருந்த நிலையில், 3வது நாளாக இன்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். கடந்த 22ம் தேதியன்று முதல்முறையாக ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மீண்டும் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்றைய தினம் 2வது முறையாக சோனியா காந்தி ஆஜரானார். நேற்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மொத்தமாக இதுவரை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் 9 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 22ம் தேதி சோனியாகாந்தி ஆஜராகும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் சுமார் 75 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள். நேற்றைய தினமும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட 75 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். காலை சுமார் 11:30 மணியளவில் கைதான அவர்கள் இரவு 8 மணி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள். தலைநகர் டெல்லியை சுற்றி சுமார் 10 கி.மீ. தூரம் சாதாரண பேருந்திலேயே அழைத்து செல்லப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இரவு 8 மணியளவில் அவர்களை டெல்லி போலீசார் விடுதலை செய்தார்கள். இந்நிலையில் 3வது நாளாக இன்றும் சோனியா காந்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சோனியாகாந்தி ஆஜராக மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்புவது அரசியல் காழ்ப்புணர்ச்சி என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.