இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவையைச் செய்தித் தொடர்பாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதற்காக கோத்தபய ராஜபக்சேக்கு எதிராகப் பல மாதங்களாக மக்கள் போராட்டங்கள் நடத்தினர். அதன் பிறகு ஜூலை 9-ம் தேதி மக்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது போராட்டம் தீவிரமானது. அதைத் தொடர்ந்து ஜூலை 13-ம் தேதி மாலத்தீவுக்குத் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே, அங்கிருந்து மறுநாள் சிங்கப்பூர் சென்றார். இந்த நிலையில், போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ரந்துல குணவர்தன ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தலைமறைவாகவில்லை. அவர் நாட்டை விட்டுத் தப்பியோடித் தலைமறைவாக இருப்பதாகவும் நான் நம்பவில்லை. அவர் விரைவில் சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மீண்டும் நாடு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு நாட்டில் உள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.