சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்று, வங்கிகளில் அளிக்கப்படும் வட்டியை விட 3 மடங்கு அதிகமாக வட்டி அளிப்பதாகக் கூறியதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் பணத்தை இந்த நிறுவனத்தில் செலுத்தி அதற்கான வட்டியும் பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு முறையாக வட்டி கொடுக்காமலும், செலுத்திய பணத்தையும் திரும்பத் தராமலும் பல்வேறு காரணங்களைக் கூறி நிதி நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவில் தொடர்ச்சியாக புகார்கள் அளித்து வந்தனர்.
அதன் அடிப்படையில் தனியார் நிதி நிறுவனத்தில் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் நிறுவன நிர்வாகியான ஈஸ்வரப்பன் முத்துசாமி என்பவரை பிடித்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தற்போது வட்டியும் கிடைக்காமல், செலுத்திய பணத்தையும் திரும்பப் பெற முடியாமல் அல்லாடி வருவதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.