தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து பலியாகிவரும் நிலையில், நேற்று மேலும் ஒரு 11-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார்.
தமிழக மாவட்டம் சிவகாசியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் பிணமாக கிடந்தார். இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தகவல்களின்படி, உயிரிழந்த மாணவியின் பெயர் யோகலட்சுமி (17), அவர் சிவகாசியில் அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள். இவர் பாரைப்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி படித்து வந்துள்ளார்.
சிறுமி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தற்கொலைக் குறிப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அவர் அடிக்கடி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மாணவின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை எதுவும் கூறமுடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.
தமிழகத்தில், கடந்த இரண்டு வாரங்களில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளும், தற்போது 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியும் உயிரிழந்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் கடந்த இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிவகாசியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாணவி, நான்கு பக்க தற்கொலைக் குறிப்பில், தனது பெற்றோர்களின் ஐஏஎஸ் ஆசைகளை நிறைவேற்ற முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துவந்த திருத்தணியைச் சேர்ந்த மாணவி சரளா விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை.
இந்த நான்கு இறப்புகளில் முதல் இறப்பு ஜூலை 13 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் அருகே பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் அடுத்தடுத்து மாணவிகள் பலியாகிவருவது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.