சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை; புதைக்கப்பட்ட மான் சடலம்… வனத்துறை தீவிர விசாரணை!

நீலகிரி மாவட்டம் ஊட்டி, மாந்தாடா பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்துக் கிடப்பதாக வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அந்தத் தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சென்று பார்த்த போது சிறுத்தை ஒன்று சுருக்கு வலைக் கம்பியில் சிக்கி உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர்.

அதையடுத்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். சிறுத்தை இறந்து கிடந்த இடத்துக்கு அருகிலேயே மானின் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். இந்த வனக்குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள், “விளை நிலங்களுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு வேலி அருகிலேயே சட்டவிரோதமாக சுருக்கு வலைக் கம்பிகளை வைத்திருக்கின்றனர். இதில் சிக்கிய சுமார் 7 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்திருக்கிறது. இதன் அருகிலேயே மானின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டிருக்கிறது. மானையும் இதே போன்று சுருக்கு வைத்துக் கொன்று புதைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. உடற்கூறாய்வுக்கான மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். தோட்ட உரிமையாளர் மற்றும் உள்ளூர் மக்கள் சிலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.