புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் நிதி முறைகேடாக எடுக்கப்பட்டு நிர்வாகிகளின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா (84) தவறாக பயன்படுத்தி சில நியமனங்களை செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. இது தொடர்பாக பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை பல முறை விசாரணை நடத்தியுள்ளது.
கடைசியாக கடந்த மே 31-ம் தேதி, பரூக் அப்துல்லாவிடம், ஸ்ரீநகரில் 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில், பரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் அவர் மீது அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.