திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் சோமர்வெல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி காரகோணம் மருத்துவக் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையின்போது அதிக அளவில் பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கல்லூரியின் நிர்வாகியாகவும், தலைவராகவும் செயல்பட்டு வரும் பேராயர் ஏ.தர்மராஜ் ரசலம் நேற்று திருவனந்தபுரம் விமானநிலையத்திலிருந்து பிரிட்டன் செல்ல புறப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை கோரிக்கையின் பேரில் அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் பிரிட்டன் செல்லாமல் கல்லூரிக்குத் திரும்பினார்.
இதைத் தொடர்ந்து தர்மராஜ் ரசலத்தை நேரில் சந்தித்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜூலை 27-ல் (இன்று) அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர். இன்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் பேராயர் தர்மராஜ் ரசலம் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.