தமிழ்நாட்டில் வீட்டுவரி, சொத்துவரி, மின் கட்டணம் முதலியவை உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து சென்னையில் அ.தி.மு.க-வினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத சுயநினைவு இழந்த ஆட்சியைத்தான் தற்போது காண முடிகிறது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிற அளவுக்கு இருக்கிறது. எங்க பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதை தடுத்து நிறுத்துவதற்கு இவர்களுக்குத் துப்பில்லை.
மக்கள் விரோத செயல்களை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க சார்பில் எடப்பாடி தலைமையில் எழுச்சியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விளம்பர அரசியல் செய்யும் தி.மு.க, விளம்பரத்துக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில்கூட, தான் நடிக்க வேண்டுமென ஸ்டாலின் நினைக்கிறார்.
செஸ் போட்டி தமிழ்நாட்டில் நடப்பது மிகவும் சிறப்பான விஷயம். இந்த விளம்பரங்களில் பிரசித்திப் பெற்ற சாம்பியன்களாக இருக்கிற வீரர்களை எல்லாம் அழைத்து அவர்களை போட்டோ சூட் எடுக்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் ஹீரோவை போல உடை அணிந்து கொண்டு வருவது, எல்லாரும் பார்த்து சிரிக்கின்ற அளவிக்குத்தான் இந்த ஆட்சியின் நிலைமை இருக்கிறது. தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மைதான் அவருக்கு இருக்கிறது.
மாநிலத்தில் சட்ட-ஒழுங்கு கெட்டாலும், வன்முறை வெறியாட்டங்கள் பெருகினாலும் அதைப்பற்றி அவருக்குக் கவலை கிடையாது. தமிழ்நாட்டில் தற்போது காபந்து அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியில் இல்லாதபோது `மோடி மோடி கோ… கோ’ என்று சொன்ன தி.மு.க, தற்போது, `மோடி மோடி கம் கம்…!’ என்று கூறுகிறது. இதுதான் தற்போது தி.மு.க-வின் ரைம்ஸ் ஆக இருக்கிறது. அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தாலும், சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி தமிழ்நாட்டின் நலன், மக்கள் நலன், மாநிலத்தின் உரிமை ஆகிய மூன்றையும் நாங்கள் எங்குச் சென்றாலும் முன்னிறுத்துவோம்.
அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மீதியிருப்பது பற்றி நாங்கள் பேச வேண்டிய அவசியம் கிடையாது. உட்கட்சி விவகாரங்களில் மூன்றாம் நபர்கள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. அது பா.ஜ.க-வுக்கும் தெரியும், பிரதமருக்கும் தெரியும். நிச்சயமாக உட்கட்சி விவகாரங்களில் அவர் தலையிட மாட்டார்” என்றார்.