நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர், அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் இரண்டு அவைகளிலுமே அலுவல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று வழக்கம் போல் கூடியது. அப்போது மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெளியிட்ட அறிவிப்பில், “அவை நடவடிக்கையில் இடையூறு ஏற்படுத்தி, அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், இந்த வாரத்தின் மீதமுள்ள நாட்களில் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்” என தெரிவித்து உள்ளார்.
நேற்றைய அவை நடவடிக்கையின் போது, மாநிலங்களவை துணைத் தலைவர் அறிவுறுத்திய போதும், அதை மதிக்காத சஞ்சய் சிங், கையில் வைத்திருந்த காதிதத்தை கிழித்து அவைத் தலைவர் இருக்கையை நோக்கி வீசியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி நேற்று, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் இந்த வாரம் முழுவதும் அவை நடவடிக்கையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது. முன்னதாக, மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.