புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, கடந்த 21-ந் தேதி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் சோனியா காந்தி முதல் முறையாக ஆஜரானார். அன்று அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் 28 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் இந்த விசாரணை நீடித்த இந்த விசாரணை மாலை 7 மணி அளவில் நிறைவடைந்தது. மீண்டும் நாளை (இன்று) விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, நேஷனல் ஹெரால்டு வழக்கில் 3-வது முறையாக அமலாக்கத்துறை முன் சோனியா காந்தி இன்று மீண்டும் ஆஜரானார். அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
அதேவேளை, சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், விலைவாசி உயர்வை கண்டித்தும் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். இதனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக விஜய் சவுக் பகுதியில் சாலையில் அமர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்திய போதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இதேபோன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.