இந்தியாவில் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தை கொண்டு வந்துள்ளது கூகுள் மேப்ஸ். இருந்தாலும் இப்போதைக்கு இந்த அம்சத்தை பெங்களூரு நகரில் மட்டுமே பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் பரவலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது கூகுள் நிறுவனங்களின் பல்வேறு அப்ளிகேஷன்கள். ஜி பே, குரோம், கூகுள் பிரவுசர், கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ் என பல அப்ளிகேஷன்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையிலான பயன்பாட்டுக்காக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று வர வழி சொல்கிறது கூகுள் மேப்ஸ். ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும், எவ்வளவு தொலைவு உள்ளது என அனைத்து விவரத்தையும் சொல்வதோடு, வாய்ஸ் அஸிஸ்டண்ட்ஸ் வசதியையும் வழங்குகிறது இந்த அப்ளிகேஷன்.
இந்நிலையில், ஸ்ட்ரீட் வியூ அம்சத்தை இந்தியாவில் கொண்டு வந்துள்ளது கூகுள் மேப்ஸ். இதன் மூலம் பயனர்கள் அவரவர் இருந்த இடத்தில் இருந்தபடியே விர்ச்சுவலாக பல்வேறு இடங்களை தெளிவாக நேரில் சென்று பார்ப்பதை போலவே எக்ஸ்புளோர் செய்யலாம். அதோடு ஸ்பீட் லிமிட், மூடப்பட்டுள்ள சாலைகள் போன்ற விவரங்களையும் வழங்கும் என தெரிகிறது. இதற்காக டெக் மகேந்திரா மற்றும் ஜெனிசிஸ் இன்டர்நேஷனல் உடன் கூகுள் இணைந்துள்ளது.
இன்று முதல் இந்த அம்சத்தை இந்தியாவில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை பெற்ற முதல் நகரமாக பெங்களூரு உருவாகி உள்ளது. தொடர்ந்து படிப்படியாக ஹைதராபாத், சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாசிக், வதோத்ரா, அகமதுநகர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக இந்த பத்து நகரங்களில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும். அதன் பின்னர் மற்ற நகரங்களுக்கு விரிவு செய்யப்படும் என தெரிகிறது.
Google maps street view feature launched in India. Watch how it works. @googlemaps pic.twitter.com/6aEj6knb26
— Pradeep Pandey