நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அண்மையில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கடைநிலை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த தர்ஷனா என்ற பெண் ஒருவர் தன்னுடன் சில மாதங்களுக்கு முன்பு பணியாற்றிய பெண் ஒருவரைக் காணவில்லை எனவும், மருத்துவக் கல்லூரி ஒப்பந்த பணியாளர்கள் தன்னைத் தாக்கியதாகவும் பரபரப்பு புகார் ஒன்றை ஊட்டி ஜி.1 காவல் நிலையத்தில் அளித்திருக்கிறார். இந்த பெண் அளித்த பரபரப்பு புகாரின் பிண்ணனி குறித்து விசாரித்தோம்.
தர்ஷனா அளித்திருக்கும் புகாரில், “ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். மே மாதம் 15-ம் தேதியன்று எனக்கு இரவு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அதே போல் அந்தப் பெண்ணுக்கும் இரவு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இருவரும் ஒரே இடத்தில் பணி செய்து கொண்டிருந்த நிலையில், என்னை ஒரு வேலைக்காக அருகில் சேட் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குப் பணியை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, இரவு பணி செய்ய வந்த அந்தப் பெண் அங்கு இல்லை. அன்றுதான் அந்தப் பெண்ணை நான் கடைசியாகப் பார்த்தேன். அதன் பிறகு மருத்துவமனையில் பார்க்கவேயில்லை.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று பணிக்கு வந்த என்னிடம், தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர் உள்ளிட்ட சிலர், `யார் வந்து இது குறித்து கேட்டாலும், விசாரித்தாலும் வெளியில் சொல்லக் கூடாது’ என மிரட்டி என்னைத் தாக்கினர். இதனால், அச்சமடைந்த நான் சில நாள்களாக வேலைக்குச் செல்லவில்லை. எனவே இந்தப் பிரச்னை குறித்து விசாரித்து உரிய தீர்வு காண வேண்டும்” எனப் புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக புகார் அளித்த தர்ஷனாவின் பெற்றோர் நம்மிடம் பேசினார்கள். “மாயமான பெண்ணுக்கு ஏதேனும் பாலியல் தொல்லை நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அந்தப் பெண் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என எங்கள் மகளை தொந்தரவு செய்து வருகின்றனர். அரசாங்கம்தான் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும்” என்றனர்.
இந்தப் புகார் குறித்து நம்மிடம் பேசிய ஊட்டி ஜி.1 காவல்துறையினர், “இளம்பெண் அளித்திருக்கும் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். உள்ளுக்குள் பாலியல் புகார்கள் இருப்பதாகவும், மருத்துவமனை நிர்வாகம் மறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை தெரிய வரும். சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.