பஹத் பாசிலின் மலையான் குஞ்சுவை புகழ்ந்த மாரி செல்வராஜ்
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பஹத் பாசில் கடந்த வருடம் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தில் வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றார். அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் துறுதுறுப்பான சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்தில், முதல் பாதி முழுக்க கிட்டத்தட்ட படத்தின் கதாநாயகன் போல நடித்து இன்னும் அதிக வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து தமிழில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் மாமன்னன் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் பஹத் பாசில்.
இந்தநிலையில் சமீபத்தில் பஹத் பாசில் மலையாளத்தில் நடித்த மலையான் குஞ்சு என்கிற திரைப்படம் வெளியானது. கேரளாவில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டு இன்னலுக்கு ஆளாகும் மக்களின் துயரத்தை சொல்லும் விதமாக நிஜ சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் பஹத் பாசிலின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ், “இந்த படம் ரொம்பவே சென்சிடிவான கதையை கொண்டது. இந்த படத்தில் பஹத் பாசிலின் அற்புதமான நடிப்பு, ஏ.ஆர் ரகுமானின் மனதை வேட்டையாடும் இசை, அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை ரொம்பவே தத்ரூபமாக படமாக்கிய படக்குழுவின் முயற்சி என தியேட்டரில் படம் பார்க்கும்போது அற்புதமான உணர்வை கொடுத்தது.. படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று அனைவரையும் பாராட்டி உள்ளார்.